கவிஞர் அஹமது ஃபைஸல் தனது “நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது“கவிதைத் தொகுதியை எனக்கு தபாலிட்டிருந்தார். கவிஞருடன் நெருங்கிப் பழகிய அனுபவமோ அவரை நேரில் சந்தித்ததோ கிடையாது.அவரது அன்பை நான் மெச்சுகிறேன்.

புத்தகத்தை எனது குட்டித் தங்கை புரட்டிப் பார்த்தாள்.உள்ளே இருக்கும் அறிமுகக் குறிப்பில் படித்து அவரது “ஆயிரத்தோராவது வேதனையின் காலை“ சிறப்பான தலைப்பு என சிலாகித்தாள்.அப்படியானால் இந்தத் தலைப்பில் அவளுக்குப் பிடிப்பு ஏற்படவில்லை போலும்.பின்னொரு நாளில் இந்தத் தலைப்பை அவள் புரியக்கூடும்.அப்போது அது குறித்து எழுதுவாள் என்று நம்புகிறேன்.

பைஸல் இந்தப் புத்தகத்தினூடாகவே எனக்கு அறிமுகமானார்.அவரது கவிதை மொழி, bookபடிமங்கள்,குறியீடு எல்லாமே புதிய தளத்தில் பயணிப்பதை தலைப்பிலே நான் கண்டு கொண்டேன்.விடியலின் பின்னரான இளம் காலை வேளையில் அவரது புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.சில பிரத்தியேகமான நேரங்களில் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது என்பது புரிந்தது.

வாசிக்க வாசிக்க சமாந்திரக் கோடுகள் சரிய ஆரம்பித்தது. புனைவினதும் கற்பனையினதும் தொட முடியாத உயரங்களை நோக்கி இழுத்துச் செல்லும் எழுத்து முறை பைஸலுக்கு வாய்த்திருக்கிறது. அவரது எழுத்துக்குள் ஒரு பறவையென அலைய ஆரம்பிக்கிறோம்.தன் சிறகுகளால் அவர் எம்மை மேல் நிலைகளை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

நாம் சிந்திக்கத் தலைப்படாத திசைகளை நோக்கி அவரது பெரும்பாலான கவிதைகள் நம்மை அழைக்கிறது.அவரது கவிதை வார்ப்புச் செயல் புதிய அணுகுமுறைகளை தமிழுக்கு வழங்குகிறது.

 

அறிமுகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல “அஹமது பைஸல் கவிதைச் செயல்வாதம் புரியும் புதிய அணியைச் சேர்ந்தவர். பொத்துவிலைப் பிறப்படமாக்க் கொண்ட இவர்,நாம் இதுவரை வாசித்துவந்த பிரதிபலித்தல் கவிதைக் கோட்பாட்டிலிருந்து விலகி கவிதையின் புதிய பரிமாணங் களையும் அகலித்த வெளிகளையும் புனைவின் உச்சங் களையும் தேடிப் பயணிக்கும் கவிப் பறவைகளில் ஒருவர்“

இன்று நான் கடைக்குச் சென்று

ஒரு புதிய பேனா வாங்கினேன்

என் பேனாவுக்குள் மொத்தம் எத்தனை

சொற்கள் இருக்கின்றன

பேனாவை எனக்கு விற்றவனும்

எண்ணிக் கணக்கெடுக்கவில்லை.

இது அபூர்வமான சிந்தனை.எழுதும் போனவுக்குள் இருக்கும் சொற்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.ஆனால் இன்றைய கணிணி விசப் பலகையில் நேரடியாக எழுதும் உலகில் இது எந்தளவு பொருந்தி வருகிறது என்று தெரியவில்லை.

எவ்வளவு நேரமாக

அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருக்கிறேன்.

கதவுகளுக்குக் கேட்கவில்லை.

காது கேளாத கதவுகளை வைத்துவிட்டு

வீட்டுச் சொந்தக்காரன் எங்கே போயிருப்பான்?

தட்டியும் திறக்கப்படாத கதவுகளுக்கு முன்னாள் நின்றிருந்த நேரங்களுக்கான அபூர்வமான பதில் இக்கவிதைக்குள் புதைந்திருந்தது.

சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு

காது வெளியே இருக்கிறது.

கேட்பதற்கு யாரும் இல்லாமல்

பசி உள்ளே இருக்கிறது.

நண்பர் ஒருவருடனான ஸ்கைப் உரையாடலின் போது இந்த வரிகளை அவருக்குப் படித்துக் காட்டினேன்.பசியை விசாரிக்க மறந்ததால் இன்று உலகம் எதிர்கொள்ளும் அபாயகரமான விளைவுகள் கவிதைக்குள் உணர்த்தப்படுகிறது.

குளம் என்ற தலைப்பில் இப்படி ஒரு கவிதை இடம்பெறுகிறது.

என் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த குளம்

மல்லாக்கப் படுத்திருந்தது.

அலுத்துப் போய் குப்புறப்படுக்க முயற்சித்த போது

ஆழத்திலிருந்த மீன்கள் மேலெழுந்து மிதக்கத் தொடங்கின

இதுவரை நான் காணாத குளத்தின் நிர்வாணத்தை

பறவைகள் மூடி மறைத்துக் கொண்டிருந்தன.

இது ஒரு சுவாரஷ்யமான கற்பனை.ஆறு, கடல்,கிணறு எல்லாவற்றின் நிர்வாணத்தையும் கண்களுக்கு முன்னாள் இக்கவிதை இருத்துகிறது.

இன்னொரு கவிதையில் இப்படி வருகிறது.

என் வகுப்பறைக்குள் இரவு நிலவுகிறது

ஜோர்ஜ் லூயி போர்ஹே

மாமரத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்

வழக்கமான கவிதைகளில் ஒரு சிறுமியோ சிறுவனோ உரையாடுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு ஒரு இலக்கிய மேதை உரையாடுவது கவிதையின் ஆழத்தை இன்னும் கூட்டுகிறது.

சுவிங்கம் போல் இழுத்துச் சென்று

தெருவில் போட்டான்.

என்பது அழகிய உவமானம்.சுவிங்கத்தை இங்கு அவர் பயன்படுத்தியிருப்பது குழந்தைகளின் செயலிலிருந்து என்று எண்ணத் தோன்றுகிறது.நாம் சுவைத்துவிட்டு எறிந்துவிடுகிற கவனிக்கப்படாத ஒன்று அழகிய முறையில் பயன்படுத்தப்படுகிறது.

நம் பால்ய காலத்து நினைவுகளை பல மாதிரி எழுதுகிறோம்.பல கட்டுரைகள் படிக்கிறோம்.ஆனால் பைஸல் ஒரு உயிர்ப்பான படிமத்தின் மூலம் அதனை நமக்கு முன்னாள் நிறுத்துகிறார்.

என் பால்ய காலத்து ஊஞ்சல்

கயிற்றை அறுத்துக் கொண்டு வந்து நின்றது.

என்னை மிகவும் ஈர்த்த கவிதை வாழ்வு எனும் தலைப்பில் அமைந்ததுதான்.

பறந்து கொண்டிருக்கும் போது

தன் வாலைத் திரும்பி பார்த்த காரணத்தினால்

விழுந்து கொண்டிருக்கிறது இலை.

பைஸலின் கவிதைச் செயலை சரியாகக் காட்டும் கவிதையாக நான் இதனையே கருதுகிறேன்.

ஆட்டுக்காரி இன்னொரு புதிய பரிமாணத்தை வழங்குகிறது.

மழையில் ஆடு கரைகிறது

கரைந்தோடும் ஆட்டை

பிடித்துக் கட்டுகிறாள் ஆட்டுக்காரி.

திரும்பவும் மழையில் ஆடு கரைகிறது

குட்டியை அவிழ்த்துவிடுகிறாள் ஆட்டுக்காரி.

நான் போய் மழையைப் பிடித்துக் கட்டினேன்.

ஆடு குட்டியுடன் புல் மேய்ந்தது.

இங்கு மழையைப் பிடித்துக் கட்டினேன் என்பது கொஞ்சம் நின்று பார்க்க வேண்டியது.இப்படியான அதீத தருணங்கள் புத்தகத்தில் நிறைய இருக்கின்றன.

நினைவு,சிறை,வேண்டுதல்,எழுத்தின் குகை,புத்தகப் பைக்குள் மரங்களைக் கொண்டு போனவன்,மழை பெய்யச் சிந்தித்தல்,மூன்று முறை மழையை எழுதுகிறேன்,எது என் இடம்,பறக்கும் உலகம்,தண்டனைகள்,அறேபிய சித்திரம் போன்ற தலைப்புகளில் அமைந்த கவிதைகள் என் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.சிறுகவிதை அ.ஆ.இ வெகுவாக என் அக்கறைக்கு வரவில்லை.

பைசல் அவர்களது ஒரே கவிதையில் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வார்த்தைகள் இருப்பது போலவே புனைவின் உச்சங்களும் இருக்கின்றன.எளிய சாவிகளைக் கொண்டு புனைவின் அடர்ந்த கதவுகளை நாம் திறக்க முயற்சிக்கிறோம்.ஒரே கவிதை பல அடுக்குகளில் நம் நினைவுகளை தேங்க வைத்து வேடிக்கை பார்க்கிறது.

 

காகம்,மீன்,பூனை,கோழி என்று நாம் அன்றாடம் காண்பவற்றின் வழியே அவற்றைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தி புதிய உலகில் எம் கற்பனையை பிரவேசிக்கச் செய்கிறார்.

எமக்குப் பரிச்சயமான சொற்களால் புதிய எல்லைகளையும் புனைவின் உச்சங்களையும் அவர் தொடுவதுதான் இத்தொகுதியின் சிறப்பம்சம்.

சில கவிதைகளில் அவரின் ஊரின் காட்சி அமைவியலை அப்படியே தரிசிக்க முடிந்தது.அவற்றை படிமங்களால் நிகழ்த்தாமல் வார்த்தைகளால் சாத்தியமாக்குகிறார்.

“நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது“ கவிதைத் தொகுதி நம் காலத்தின் முக்கிய கவித்தொகுதி.புதிய வெளிகளில் வாசகனை அது அழைத்துச் செல்கிறது.கால்களை நிலத்தில் வைத்து அந்தரத்தில் பறக்கும் அனுபவம் போன்றது இத்தொகுதி தரும் சுகம்.பைஸலுக்கு என் பாராட்டுக்கள்.நீங்கள் இன்னும் பல கவிதைகளைத் தர வேண்டும். புத்தகத்தை காகம் பதிப்பகம் அழகிய முறையில் வெளியிட்டுள்ளது. பதிப்பகக் குழுவிற்கும் என் வாழ்த்துக்கள்.