“ஒரு வகுப்பிற்கு இரண்டு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.காரணம் ஒருவர் பாடம் நடத்தவும் மற்றவர் மாணவர்களின் செயற்பாடுகளை அருகிலிருந்து கவனிக்கவும் முடியும்.இருவரும் கலந்தாலோசித்து ஒவ்வொரு குழந்தையின் புரிதல் பற்றியும் விவாதித்துக் கற்றுத் தந்தால் விளைவுகள் பிரமாதமானதாக இருக்கும்“ ஜோன் ஹோல்ட்

 

ஜோன் ஹோல்ட் எழுதிய எப்படிக் குழந்தைகள் தோற்றுப் போகிறார்கள்?(How to Fail Children) எனும் நூலில் இக் குறிப்பு வருகிறது.(ஆசிரியரின் டயரி எனும் பெயரில் இது யுரேகா பதிப்பகத்தால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது)

இதனை மேற்கோள் காட்டும் எஸ்.ரா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.

“சென்னை மாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.ஆனால் அவற்றின் கற்றுத் தரும் முறை,மாணவர்களை மதிப்பிடுதல், பொதுத் திறன்,சிறப்புத் திறன்களைக் கண்டறிதல் தொடர்பான பொது அறிக்கை அல்லது அனுபவப் பகிர்வுகள் சார்ந்த கையேடுகள் எதுவும் கண்ணில் படவேயில்லை.

இவ்வளவு ஆசியர்களும் தங்களது பணி அனுபவத்தை என்னதான் செய்கி றார்கள்? வகுப்பிற்கு வெளியே ஆசிரியர்களின் பணி என்ன?வகுப்பிற்குள் அவர்கள் என்ன கண்டறிகிறார்கள்?எதை உருவாக்கினார்கள்,எதைப் புரிந்து கொண்டார்கள் என்பது ஏன் தொகுக்கப்படவே இல்லை?தங்க மீன்களைப் பார்த்து முடித்த பின்னர் இக் குறிப்புகளே எனக்குள் வந்து போயின.

“எங்களோடு விளையாடக் கூடிய ஆசிரியர்களைத்தான் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்“

 

தங்கமீன்கள் படத்தில் செல்லம்மா உச்சரிக்கும் கடைசி வாசகங்கள் இவை.குழந்தைகளின் மன உலகம் தமது ஆசிரியர்களை நட்புடன்தான் கட்டமைத்து வைத்திருக்கிறது.ஆனால் ஆசிரியர்களோ குழந்தைமையின் மன உலகத்தை அப்படிப் புரிவதில்லை.ஆரம்ப வகுப்புக்களில் கற்கும் சிறுவர்களின் மன உலகம் விசித்திரமானது.அவை கற்பனை உலகில் சஞ்சரித்துத் திரிபவை.பாடப் புத்தகங்களுக்கு வெளியிலே அவர்களது உலகம் இருக்கிறது.

எல்லா ஆசிரியர்களும் குழந்தைகளை மாணவர்களாகத்தான் பார்க்கிறார்கள். அவர்களை ஒரு போதும் குழந்தைகளாகப் பார்ப்பதில்லை. தாம் கொடுக்கும் வீட்டுவேலைகளை செய்தார்களா இல்லையா? என்பதுதான் பெரும்பாலும் ஆசிரியர்கள் சிந்திக்கும் முறை.ஆனால் அதைச் செய்ய அம் மாணவனுக்கு,மாணவிக்கு இயலுமை இருந்ததா?அதற்கு உதவி செய்யும் கல்வித் தரத்தில் அவர்களது பெற்றோர்கள் இருப்பார்களா?என்பதையெல்லாம் சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை. ஹோம் வேர்க் செய்யவில்லை என்றால் தமது பிரம்புக்கு வேலை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.அல்லது திட்டித் தீர்த்து விடுவார்கள்.(இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்கள்)

வகுப்பில் செல்லம்மா போன்ற பிள்ளைகளை கேலி செய்யும் வழக்கம் எல்லாப் பாடசாலைகளிலும் இருக்கத்தான் செய்கிறது. கவணித்து நெறிப்படுத்தத் தவறுவதால் ஏராளமான குழந்தைகள் உளவியல் பாதிப்புக்கும் நோய்களுக்கும் ஆளாகின்றனர்.ஒரு பாட வேளையில் இதையெல்லாம் கவனிக்க நேரம் கிடைப்பதில்லை என்றே பெரும்பாலான ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.மாணவர்களின் மன உளவியல் பாடப் புத்தகத்தின் கனதியோடு மேலும் கனத்து விடுகிறது.இது போன்ற குழந்தைகளே பெரும்பாலும் ஆசிரியர்களின் பார்வையில் குற்றவாளிகளாகத் தெரிகின்றனர்.

 

ராமின் தங்க மீன்கள் இதனை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.எவிட்டா மிஸ் போன்றவர்கள் ஒரு பாடசாலையில் அரிதாகவே இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் தன் மாணவருக்கு வழங்கும் குறைந்த பட்ச அன்பு பாடவிதானத்தை விடப் பெரியதாகவே அவர்களுக்குத் தெரிகிறது. கண்டிப்புக்கும் அன்புக்கும் மத்தியில் சமனிலை பேணும் போதே ஒரு நல்ல ஆசிரியராக மாணவர் மனதில் இடம் பிடிக்க முடியும்.

இந்த உளவியல், யதார்த்தமாக தங்கமீன்களில் வலுவான திரை மொழியில் காட்சிப்படுத்தப்படுகிறது.எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது ஆசிரியர்களுக்குத் தெரிகிறது.ஆனால் எப்படிக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அநேகமானவர்களுக்குப் புரிவதில்லை.தாரே ஸமீன் பர்,3 இடியட்ஸ் போன்ற திரைப்பங்கள் இதனை வலியுறுத்தின.தங்க மீன்களும் இதனைப் பேசியிருக்கிறது.

இயக்குநர் ராம் தன்னைச் சூழ உள்ள உலகினை நுணுகி ஆராய்ந்திருக் கிறார் என்பது திரையின் மொழியில் தெரிகிறது.ராம் பேச எடுத்துக் கொண்ட விடயங்கள் சமூகத் தளத்தில் விரவிக் காணப்படுகின்ற விடயங்களே.இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேசப் பாடசாலைகள் தெருக்குப் பல தோன்றி விட்டன.பணம் திண்ணும் பாடசாலைகள் எத்தனையோ குழந்தைகளைகளின் வாழ்வையும் பெற்றோரின் வாழ்வையும் சேர்த்துக் கொன்றுவிட்டன.

ஒரு பெண் பிள்ளையின் வாழ்வில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் இருக்கும் அன்பு அதனைச் சூழ உள்ள குடும்ப,பண நெருக்கடி,கூட்டுக் குடும்பத்தில் எதிர் கொள்ளும் சங்கடங்கள்,சிக்கல்கள் என ஒரு தொகுதிப் பிரச்சினைகளை இன்னொரு தளத்தில் படம் பேச எடுத்துக் கொள்கிறது.

“மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.“ இதனை நிரூபிக்க படத்தின் இரண்டாம் பகுதி முனைகிறது.

சில பெற்றோர்கள் குழந்தைகள் என்னதான் அடம்பிடித்தாலும் அவர்கள் கேட்கும் மிட்டாயை,கடலையை,பொம்மையை,ஐஸ் கிரீமை வாங்கிக் கொடுப்பதில்லை.பணம் இல்லாமை ஒரு காரணம் தமக்கு விருப்பமில்லாமை என்பது இன்னொரு காரணம்.

செல்லம்மாவின் பாடசாலைப் பணத்திற்காக உழைக்கும் கல்யாணி ஒரு நாயக்குட்டி வாங்க 25000 ரூபாவுக்காக காடு மேடுகளைக் கடந்து அலைய நிர்ப்பந்திக்கப்படுகிறான்.இது கொஞ்சம் மிகையான காட்சியாக இருந்தாலும் ஒரு குழந்தையின் உள்ளத்தை சரியாகப் புரிந்து கொண்டதின் அடையாளமாகவும் இக்காட்சியைப் பார்க்கலாம்.

படத்தின் இறுதியில் நாய்க் குட்டி ஓடி வருவதும் செல்லம்மா அதைத் தூக்கியவாறு சிரிக்கும் சிரிப்பொலியும் அங்கு நிலவும் இருவரினதும் மகிழ்ச்சியும் குழந்தை கேட்ட ஒன்றை வாங்கிக் கொடுத்தேன் என்ற திருப்தியினதும் நான் விரும்பியதை அப்பா வாங்கிக் கொடுத்தார் என்ற அன்பினதும் ஒன்று சேரும் தருணமாகும்.அதன் காட்சி அமைப்பும் பின்னணி இசையும் நடிப்பும் நம்மைக் கட்டிப் போடுகிறது.

தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் வொடா போன் நாய்க்குட்டி 25000 ரூபா விலை போகிறது என்பதை அறிந்ததும் கல்யாணி மலைத்துப் போகிறான்.விளம்பரத்தில் விலையையும் சேர்த்தா காட்டுகிறார்கள் என்று கல்யாணி கேட்கும் போது அத்தனை விளம்பரங்களும் கேள்விக் குள்ளாகிறது. எல்லா விளம்பரங்களும் இன்றைய வணிக உலகில் எத்தனை உள்ளங்களை காயப்படுத்தும் என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது.

ஒரு குழந்தை எழுப்பும் கேள்விகள் விசித்திரமானவை.உயர்ந்த கற்பனைகளோடு எஎதிர்பார்க்காத கோணங்களிலிருந்து அவர்கள் கேள்விகளை உண்டாக்குகின்றனர்.செல்லம்மா கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் குழந்தைகள் இலக்கியத்தின் உச்சங்களாகவே எனக்குள் தோன்றின.“தாத்தாதான் காக்காவா?“ “மலைக்கு அங்காலதான் ஸ்கூல் பீஸ் எல்லாம் இருக்கா?“ “நீச்சல் தெறியாம போனா என்னப்பா ஆகும்? “செத்துப் போறதுன்னா என்ன அப்பா? மலையில செத்தா என்னப்பா ஆயிடுவாங்க? காட்டுல செத்தா? குளத்துல செத்தா? என்று தொடரும் கேள்விகளும் அப்பா வழங்கும் பதில்களும் குழந்தைப் பேரிலக்கியப் புத்தகம் உன்றைப் படிக்கும் அனுபவத்தைத் தருகின்றது.

ஆனால் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவர்களை விட பெற்றோருக்கு கற்பனா சக்தி முக்கியம் என்பதையும் இயக்குநர் எமக்கு உணர்த்துகிறார்.

மாமியார் மருமகள் உறவில் தப்பபிப்பிராயங்களும் சந்தேகங்களும் தோற்றம் பெரும் தருணங்கள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.மனித வாழ்க்கை எத்தகைய நுண்ணிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என்பதற்கு இது போன்ற பல பதிவுகள் படத்தில் இருக்கின்றன.

அடுத்தவனுக்கு உதவி செய்யும் பண்பு இந்த உலகில் எவ்வளவுக்கு இல்லாமல் போயிருக்கிறது?கல்யாணியின் உற்ற நண்பனால் கூட அவசரத்திற்குப் பணம் தர முடியாமல் போகிறது.இதுதான் வாழ்வின் யதார்த்தம்.அந்த யதார்த்தமே படமாக்கவும் பட்டுள்ளது.வழக்கமான தமிழ் சினிமாவில் நண்பர்களுக்காக உயிரையே கொடுக்கும் யதார்த்த முரணே கட்டமைக்கப்படுகிறது.

தங்கமீன்கள் போன்ற யதார்த்த சினிமாக்கள் 10 வருடத்தில் இரண்டு அல்லது மூன்றுதான் வெளி வருகின்றன.உப்புச் சப்பற்ற மசாலா சினிமாக்கள்தான் இன்றைய தமிழ் பேசும் உலகில் வாழ்வியலைக் கட்டமைக்கின்றன.நமது ரசனை எந்தளவு கீழ்மட்டத்திற்குப் போயிருக்கின்றது.அதனை மேம்படுத்தும் நோக்கில் அரிதாகவே திரைப்படங்கள் வருகின்றன.ஒரு நல்ல படத்திற்காக ஆண்டுகளாகக் காத்திருக்கும் துரதிஷ்டமே நமது தலைவிதி.ராம் கூட இப்படத்தைக் கொண்டு வர மூன்று ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.

இந்தத் தலைவிதிதயை மாற்றுவதில் ராம் போன்றவர்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது.ஆயிரக் கணக்கான தங்கமீன்களினாலேயே தமிழ் சினிமாவின் அழுகிய குளத்தை சுத்தப்படுத்த முடியும்.

ஒவ்வொரு ஃப்ரேமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தனித்த அழகோடு தெரிகிறது.ஆனந்த யாழை பாடல் வெகு அழகோடு படமாக்கப்பட்டுள்ளது. காட்சிகள் கதையிலிருந்து பிரிந்து நிற்காமல் எல்லாக் காட்சிகளும் கதைச் சூழலோடு ஒன்றித்துப் போகிறது.தமிழ் சினிமாவின் வாசம் இங்கு இல்லை.இயல்பான நடிப்பு,அருமையான ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு,இசைக் கோர்வு என செல்லம்மா வீட்டு முன்றலில் இருந்து பார்க்கும் போது தெரியும் ரயிலைப் போல இயல்பாக அமைந்திருக்கிறது. ராமுக்கும் தயாரிப்புக் குழுவுக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள்.