‘கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகையும் கல்வியும் எத்தனையோ மடங்கு விரிவடைந்துவிட்டன.ஆனால் ஒரு நூலின் அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கை மாறுதலடையவே இல்லை.இன்று வாசிப்பை பல்வேறு நிலைகளில் ஒரு இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை தீவிரமடைந்திருக்கிறது’

–தோன்ற மறுத்த தெய்வம்-

புத்தகங்களும் வாசிப்பும் இந்த உலகின் அறிவுப் பயணத்தில் மிக முக்கிய சாதனங்கள்.வாசிப்பின்றி மனிதன் பூரணமாவதில்லை.இதனைத்தான் வாசிப்பு மனிதனை முழு மனிதனாக்கும் என்று மரபு வழியாகச் சொல்லி வருகிறோம்.

 

வாசிப்பு நம் அகவெளியை விசாலப்படுத்தி புதிய உலகிற்குள் எம்மை அழைத்துச் செல்கிறது.அந்த உலகுக்குள் ஒவ்வொரு முறை நுழையும் போதும் இன்னும் பல தளங்களுக்கு அது நம்மை அழைத்துச் செல்கிறது.வாசிப்பு ஆழப்படும் போது சிந்தனை முதிர்ச்சி பிறந்து விடுகின்றது.வாசிப்பினூடாக நாம் இவ்வுலகினைப் புரிந்து கொள்கிறோம்.வாழ்வின் பிரமாண்டத்தை வாசிப்பே எமக்குப் புரிய வைக்கின்றது.வாசிப்புள்ள ஒரு சமூகத்தினால் தான் வாழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.

வாழ்நாள் முழுதும் கற்றல் (life long learning) என்னும் கருத்துக்கு வாசிப்பே முழுமையான அர்த்தத்தை வழங்குகின்றது.வாழ் நாளையே அது வாசிகசாலை ஆக்கிவிடுகிறது.

இன்று வாசிப்பிற்கான சூழல் அதிகரித்துள்ளது.அதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் பெருகியுள்ளன.சமூக இணையதளங்களின் வருகை தகவல் யுகத்தில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.முன்பு ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்வதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.ஆனால் இன்று ஒரு எழுத்துக்கு அடுத்த வினாடியே பதில் சொல்லும் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எனவே எழுத்தாளனும் வாசகனும் இன்றைய உலகில் நெருக்கமாகி இருப்பதனைப் புரிந்து கொள்கிறோம்.

வாசிக்கும் பழக்கம் (reading habit) இன்றி வளரும் இளைஞர்களைவிட, வாசிப்பதை விரும்பாத (reading reluctancy) ஒரு சாரரும் பெருகி வருவதை இன்றைய உலகில் நாம் காணலாம்.

வாசிக்குமாறு தூது இறக்கப்பட்ட ஒரு சமூகம் நாங்கள்.ஒரு போதும் நாம் அதனைப் புறக்கணிக்க முடியாது.எனவே பரந்த எல்லைகளை நோக்கி எமது வாசிப்பை அகலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

வாசிப்பதற்கு எண்ணற்ற விடயங்கள் நம் முன் குவிந்து கிடக்கின்றன.எதை வாசிப்பது,எதை விடுவது என்ற ஒரு குழப்பம் நமக்கு எழத்தான் செய்யும்.ஆனால் ஒரு துறையில் வாசிக்காமல் பல துறைகளில் வாசிப்பைச் செலுத்த வேண்டும்.

 

பல மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கும் ஒருவருக்கு வாசிப்பின் பல திசைகளை அறிய முடியும்.எனவே வாசிப்பிற்கு மொழி என்பது முக்கியமான ஒன்றாக அமைகின்றது.

மொழி இருந்தால் மட்டும் வாசிப்பின் சிகரம் கண்டுவிட முடியாது.வாசிப்பிற்கான ஆர்வம்தான் முக்கியம்.வாசிப்புப் பழக்கம் ஒரு தாகமென,பசியென மாறும் போதுதான் அதன் உண்மை அர்த்தத்தை உணர்ந்து கொள்ளலாம். சுவர்க்கம் என்பது மாபெரும் நூலகம் என்றே நான் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்.என்றான் ஜோர்ஜ் லூயி.

எதை வாசிப்பது?

வாசிப்பதற்கான விடயங்கள் விரிந்த அளவில் இன்றைய உலகில் இருக்கின்றன.பூரண வாசிப்பை நோக்கிச் செல்வதே முக்கியமானது அந்த வகையில் வாசிப்புக்கான சில எல்லைகளை இங்கே அடையாளப்படுத்தலாம்.

மதங்கள்

உலகின் முக்கிய மதங்களது கொள்கைகள் கோட்பாடுகள் என்பவற்றை ஒப்பீட்டாய்வின் அடிப்படையில் தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியமானது.தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் அடிப்படைகளை கொள்கைகளை முடியுமான அளவு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இலக்கியம்

இலக்கியம் என்பது வாசிப்பை ரசனை மிகுந்தகாக மாற்றக் கூடிய ஒன்று.வாசிப்பின் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள ஒருவர் இலக்கியங்களிலிருந்து ஒருவர் வாசிப்பைத் துவங்கலாம். கவிதை,உரைநடை,சிறுகதை,நாவல் போன்ற பல வடிவங்களில் ஆக்க இலக்கியங்கள் காணப்படுகின்றன.இன்று பின் நவீனத்துவம் இலக்கியத்தில் வெகுவான மாற்றங்களைச் செய்துள்ளது.மேலும் இஸ்லாமிய இலக்கியம், சிறுவர் இலக்கியம்,எதிர்ப்பிலக்கியம்,புலம்பெயர் இலக்கியம் போன்றவையும் இருக்கின்றன.இவற்றை வாசிப்பதன் மூலமும் சிந்தனையின் புதிய கதவுகளைத் திறக்கலாம்.

அரசியல்-

உள் நாட்டு அரசியல்,உலக அரசியல் என்ற இரண்டும் இதில் முக்கியமானது.நாட்டிலும் உலகிலும் நடக்கும் விவகாரங்களை கூர்மையாகவும் பகுப்பாய்வுடனும் அவதானிக்கும் போதே உலகில் என்ன நடக்கிறது என்பது புரியும்.இல்லாத போது தமது கிணற்றை கடல் என்று வாதிட வேண்டியிருக்கும்.

 

கோட்பாடுகள்-

கம்யூனிஸம்,மார்க்சிஸம்,டார்வினிஸம்,நவீனத்துவம்,பின் நவீனத்தும்,அமைப்பியல்,பின் அமைப்பியல்,முதலாளித்துவம்,ஜனநாயகம்,என கோட்பாடுகளை வாசிப்பது அவசியமானது.

தத்துவங்கள்

உலகில் பல்வேறு தத்துவங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.இவற்றில் முக்கியமானவைகளை வாசித்தல்.

இவை உதாரணத்திற்கு முன்வைக்கப்பட்ட துறைகள் இது போன்று சிந்தனைகளை விசாலிக்கச் செய்யும் நூல்களும் ஆய்வுகளும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.அவற்றில் முடியுமான நல்ல விடயங்களை தேடிப் படிப்பது ஒரு தீவிர வாசகளுன்னு முக்கியமானது.

இன்று உலகின் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்கும் அய்ரோப்பியர்கள் வாசிப்பில் முதலிடம் பெற்றவர்கள். எத்தனை நவீன பொழுது போக்கு சாதனங்கள் வந்தாலும் அவர்கள் வாசிப்பின் தீராத ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை ( கொம்யூனிசம் ) நிலை பெறத் தொடங்கியபோது பல மாற்றங்கள் நடந்தன. மனித குலத்தை விடுவிக்க வந்த கோட்பாடு என மார் தட்டிக் கொண்ட பொதுவுடைமை தத்துவத்திற்கு தன்னை தானே நிலை நிறுத்திக் கொள்ள பல வழிமுறைகள் தேவைப்பட்டது.

அதன் விளைவாக ஏராளமான படைப்புக்கள் , இலக்கியங்கள் தோன்றின. பொதுவுடைமை பரப்புரை இலக்கியம் ,சிறுவர் இலக்கியம் , பெரியவர்களுக்கான இலக்கியம் என வகை வகையாக சோவியத் இலக்கியவாதிகள் படைத்து தள்ளினர். நீரும் காற்றும் வெயிலும் உள்ள இடத்தில் தாவரம் வளர்வது போல வாசிப்பவர்கள் நிறைந்த அந்த சோவியத் பூமியில் படைப்புக்களும் செழித்து வளர்ந்தன.

இன்று கொம்யூனிசம் அது பிறந்த மண்ணிலேயே இறந்து விட்டது. ஆனால் இலக்கியங்களில் இன்னும் அது உயிர் வாழ்கின்றது. உலகெங்கிலும் அந்த இலக்கியங்களை வாசிப்பவர்கள் கொம்யூனிஸ்டாக ஆகவில்லையென்றாலும் மனித குல விடுதலைக்காக போராடும் போராளிகளாக மாறுகின்றனர்.

அண்ட சராசரங்களை படைத்து வழிகாட்டும் அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றும் நாம் நமது முதுசங்களையும் , விழுமியங்களையும் அழகியல் சொட்டும் இலக்கியங்களாக படைக்க வேண்டும். அப்படி படைப்பாளியாக மாற விரும்புபவர்கள் முதலில் பிற இலக்கியங்களை வாசிக்கத் தொடங்க வேண்டும்.

வாசிப்பில் பல்வகை இருக்கும் போதுதான் வாசிப்பு சுவை மிக்கதாகவும் ஆர்வத்திற்குரியதாகவும் அமைகின்றது.எப்போதும் தனக்குப் பிடித்தவர்களை,தான் சார்ந்திருக்கும் அமைப்பின்,இயக்கத்தின் வெளியீடுகளை மாத்திரம் வாசிப்பது ஆரோக்கியமான வாசிப்பாக அமையாது.மாற்றுக் கருத்துள்ளவர்களையும் வாசித்து உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.ஆனால் சிலர் வித்தியாசமாக வாசிக்கிறோம் என்பதற்காக அதுதான் சரியானது என்றும் ஏனையவர்களை பிழையாகவும் கருதுகின்ற வழக்கத்தையும் கொண்டிருக்கின்றனர்.

 

ஒரு வாசகன் எப்போதும் புத்தகங்களைக் கொள்வனவு செய்பவனாக இருக்க வேண்டும்.என்ன புதிய வெளியீடுகள் உலகத்தில் வருகின்றன என்பது குறித்த தேடலும் அறிவும் அவனுக்கு முக்கியம்.

புத்தகங்களை வாங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ஒரு வாசகனுக்கு புத்தகக் கடையுடனான உறவு முக்கியம்.அதே போல வாசிகசாலைகளுடான தொடர்பும் மிக முக்கியம். எம்மில் அநேகர் புத்தகக் கண்காட்சிகளுக்காவது செல்வதில்லை வருடத்திற்கு ஒரு தடவை பிரமாண்டமாக நடைபெறும் புத்தகக்கண்காட்சிக்கு குடும்பமாக விஜயம் செய்வது முக்கியம். இந்தியாவிலும் இத்தகைய புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. எழுத்தினதும் வாசிப்பினதும் உலகம் எவ்வளவு விரிந்தது என்பதனை அங்கு நாம் உணரலாம்.

வாசிக்கும் போது அத்தகைய பெருமிதங்கள் தோன்றி விடக்கூடாது.யாரோ சொல்வது போல எல்லாம் இருந்தும் மௌனம் காக்கும் நூலகமாக அடக்கமாக நிதானமாக வாசிப்பு எங்களை உருவாக்க வேண்டும்

நல்லவற்றைத் தேடி வாசித்தல் என்பது வாசிப்பில் அவதானிக்க வேண்டிய முக்கிய விடயம்.வெளியீடுகள் அதிகரித்துள்ள ஒரு சூழலில் நாம் வசிக்கிறோம்.தகவல்களால் மூலையை நிரப்புவதற்காக நாம் வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட வேண்டும்.

15 வயது ஆகிற குழந்தை இன்று 24 மணி நேரத்தில் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக பாடப்புத்தகங்களுடன் செலவிடுகிறது. கல்லூரி வரை நம் குழந்தைகளின் மூளையில் திணிக்கப்படுகிற பாடப்புத்தகங்களைத் தவிர அவர்களுக்கு வேறென்ன படிக்க கற்றுத்தருகிறோம்? வாசிப்பு பழக்கம் என்பது பசியாகவும் ருசியாகவும் இருக்க வேண்டிய நிலைமை மாதிரி, நம் அடுத்த தலைமுறைக்கு அது அலர்ஜியாகிவிட்டது.
என எழுத்தாளர் அசோகமித்ரன் ஒருமுறை சொன்னார். குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாசிக்கக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அவர்களின் கற்பனை எல்லை விரவடையும்.எனவே எமக்கும் இது முக்கியமானது.

ஒரு மனிதன் வாசிக்கும் காலமெல்லாம் அவனது சிந்தனை உயிர்ப்புடனும் புதிதாகிக் கொண்டும் இருக்கும்.என்று அவன் வாசிப்பை நிறுத்திவிடுகிறானோ அப்போது அவன் ஒரு கட்டத்தில் நின்றுவிடுகிறான்.பிறகு தானே எல்லாம் என வாதிக்க ஆரம்பித்துவிடுவான்.