மானுடப் பெறுமானங்களுக்காக நேர்மையுடனும் துணிச்சலுடனும் இயங்கிய ஒரு கலைஞர் எம்.எச்.எம் ஷம்ஸ். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் 1940.மார்ச் 17 இல் பிறந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான தினகரன் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

ஷம்ஸ் அவர்கள் சிறுகதை,நாவல்,கவிதை,பாடல்,இசை,மொழிபெயர்ப்பு என பல துறைகளுடன் இயங்கியவர்.அவரது 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வளவையின் மடியிலே அண்மையில் வெளிவந்துள்ளது.அவர் மரணித்து 13 ஆண்டுகளின் பின்னர் இத்தொகுதி வெளிவந்துள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

 

சமூகத்தின் மீது பிரக்ஞை கொண்ட ஒரு கலைஞனாக தன்னை வரித்துக் கொண்டு வளம் வந்த கலைஞர்களுள் ஷம்ஸும் ஒருவர்.எனவே ஒருமுறை அவர் இப்படி எழுதினார் “இல்லாத மாயைகளை கற்பனையாக எழுதி எழுத்துலகை ஏமாற்றுவது படைப்பாளியின் பணியல்ல. வேஷங்களை முகம்கிழித்துக் காட்டி சமூக அநீதிகளை ஒழிக்கும் பாரிய கடமைப்பாடு எழுத்தாளனுக்குண்டு. எனவேதான்,  எழுத்தை ஒரு தவம் என்பார்கள். உண்மை, நேர்மை,கருணை என்பவற்றை பற்றுக் கோடாகக் கொண்டு மனிதநேய இலட்சியம் நோக்கி படைப்புப் பணியைத் தொடருங்கள்.”

வளவையின் மடியிலே தொகுதியில் உள்ள சிறுகதைகள் சமூகத்தில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராக கோபாவேசத்தோடு முகம் கொடுக்கின்ற தன்மை கொண்டவை.ஷம்ஸ் வாழ்ந்த காலகட்டம், அவரது ஊர்ச் சூழல்,அங்கு அவர் எதிர் கொண்ட பிரச்சினைகள் என எல்லாம் நேர்ந்து அவரை இப்படி எழுதத் தூண்டியது எனலாம்.

இன்று சிறுகதை என்பது புதிய உத்திகளுடனும் பின் நவீனத்துவக் கூறுகளை உள்வாங்கியும் புதிய திசையில் பயணிக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கது.இருப்பினும் இப் புதிய பாணியை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கின்றனர்.சிறுகதை என்பது சொல்ல வருகின்ற விடயங்களை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என அவர்கள் வாதிடுவர்.இலக்கிய உலகில் இந்த விவாதங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஆனால் ஷம்ஸ் அவர்களின் கதைகள் பாரம்பரிய கதை சொல்லும் முறையிலேயே எழுதப்பட்டுள்ளன.இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் சமூகத்தின் வேர்களில் படிந்துள்ள பிரச்சினைகளை பேசுபொருளாகக் கொண்டு துணிச்சலுடன் பேசும் தைரியம் கொண்டவை. இதனாலேயே அவர் பல்வேறு இன்னல்களை வாழும் காலத்தில் எதிர் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் உணர்ந்த உண்மைகளை,நேரில் கண்ட சம்பவங்களை கலையாக்கம் செய்து சமூகத்திற்கு விட்டுள்ளார் ஷம்ஸ்.அவரது எழுத்துக்கள் கட்டயம் வாசிக்கப்பட வேண்டும்,விவாதிக்கப்பட வேண்டும்.ஒரு கலைஞனுக்கு கலை மேல் பற்று இருப்பது போல சமூகத்தின் மீதும் பற்று இருக்க வேண்டும் என்பதற்கு ஷம்ஸ் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.இச் சிறிய குறிப்பை புத்தகத்திற்கு பேராசியர் எம்.ஏ நுஃமான் அவர்கள் வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியோடு முடிக்கலாம்.

“ஷம்ஸின் கதைகள்1960,70களில் ஈழத்து இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்திய முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டின் செல்வாக்குக்கு உட்பட்டவை எனலாம்.இக்கோட்பாட்டின் பலம் அதன் சமூகப் பார்வைதான்.சமூக முரதண்பாடுகளை அம்பலப்படுத்தி ஏற்றத்தாழ்வற்ற,சுரண்டலற்ற,ஒரு சமத்துவமான சமூக அமைப்பின் உருவாக்கத்துக்கு இலக்கியம் பயன்பட வேண்டும் என்பது இக்கோட்பபபாட்டின் சாரம் எனலாம்.அதனால் இலக்கியத்தின் உள்ளடக்கம் அதன் பொருள் முதன்மைப்படுத்தப்பட்டது.கலை அனுபவத்தை மீறிய பிரச்சாரம் இக்கோட்பாட்டைப் பின்பற்றிய பலரின் பலவீனம் எனலாம்.ஷம்ஸ் தன் பிரதேச,பண்பாட்டுச் சூழலில் இக்கோட்பாட்டை உள்வாங்கி கதைகள் எழுதினார்.அவரது சமூகப் பண்பாட்டுச் சூழலில் அவரது கதைகள் உடனடியான தாக்கத்தையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தின என்பதில் ஐயமில்லை.“