வீட்டில் அப்போது ஒரு கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிதான் இருந்தது.மாலை செய்திகளைத் தொடர்ந்து “வெள்ளிச் நிறகடிக்கும் வென் புறாவே“ பாடல் ஒளிபரப்பாகும்.அப்பாடலைக் கேட்க எல்லா விளையாட்டுக்களையும் விட்டுவிட்டு என் 12 ஆவது வயதில் தொலைக்காட்சிக்கு முன்னால் வந்து அமர்வேன். போரின் அவலங்களை துயரின் வலி சிந்தும் உணர்வுகளோடு பதியப்பட்ட பாடல் அது.மூன்று தசாப்தங்களின் மொத்த வலியையும் அப்பாடலினூடு நாம் இப்போதும் புரிந்து கொள்கிறோம்.

 

எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்கள் இப்பாடலை எழுதினார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.பாடலின் வரிகள் என் பிஞ்சு இதயத்தை துளைக்காமல் விடவில்லை.

தோப்பில் முஹம்மது மீரானின் “ஒரு கடலோரக் கிராமத்தின் கதை“எனும் நாவலை யாரிடமோ இரவல் பெற்று வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் அதே பாணியில் இலங்கை முஸ்லிம் சமூகப் பரப்பின் கலாசாரப் பிறழ்வுகளை மையமாகக் கொண்டு “கிராமத்துக் கனவுகள்“ என்ற நாவலை அவர் எழுதியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஷம்ஸ் அவர்களை அவரது எழுத்தினடியாகத்தான் நான் புரிந்து கொண்டேன்.ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டுமுகத்தை ஆவேசம் கலந்த தொணியில் கேள்விக்குள்ளாக்கிய துணிச்சல் மிக்க நாவல் அது.இந்த நாவலுக்காகவே அவர் நீதிமன்றம் வரைக்கும் செல்ல வேண்டிவந்தது. இந்த நாவல் சாகித்திய மண்டல விருது பெற்றதுடன் ஜேர்மனியில் ‘கால்ர் மாக்ஸ்’ பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மானுடப் பெறுமானங்களுக்காக நேர்மையுடனும் துணிச்சலுடனும் இயங்கிய ஒரு கலைஞர் ஷம்ஸ். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் 1940.மார்ச் 17 இல் பிறந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான தினகரன் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

ஷம்ஸ் அவர்கள் சிறுகதை,நாவல்,கவிதை,பாடல்,இசை,மொழிபெயர்ப்பு என பல துறைகளுடன் இயங்கியவர்.தினகரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த காலத்தில் சாளரம்,புதுப்புணல் போன்ற பகுதிகளை அறிமுகப்படுத்தியது புது எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்ததோடு இலங்கையின் பல்சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான பாலமாகவும் அமைந்திருந்தது.அத்தோடு தெனகம சிறிவர்தனவுடன் இணைந்து சிலுமின பத்திரிகையில் ‘பாலம’என்ற பெயரில் ஐந்து வருடங்களாக தமிழ் மொழிமூல இலக்கியங்களை சிங்களத்தில் அறிமுகப்படுத்தி வந்தார்.இது இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்திய ஒரு அம்சமாகும்.

சிங்கள பௌத்த அடிப்படைவாத சவால்களுக்கும் ஷம்ஸ் பதிலளித்தார்.அஷ்ஷுறா(கருத்துமேடை) செய்திமடல் என்பவற்றின் வாயிலாக இப்பதிலடிகள் கொடுக்கப்பட்டன.

ஷம்ஸ் அவர்களின் இசைத்துறை ஈடுபாடு குறித்து சில விடயங்களை இங்கே பதிவு செய்ய வேண்டும்.அவர் இசையில் மிகுந்த நாட்டம் மிக்கவராக இருந்தார்.1957 களில் மாணவர்களுக்கு இஸ்லாமிய கீதம்,மணமங்கள கீதம் போன்றவற்றை எழுதிக் கொடுப்பவராக அவர் இருந்தார்.1974 இலிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில் பாடிவந்த ஷம்ஸ் அவர்கள் 1994 களின் பின் சமாதானப் பாடல்களை இயற்றினார். பிரமசிரி கேமதாச,ரோஹன வீரசிங்க,ரீ.எப் லதீப்,பயாஸ் ஸவாஹிர்,சமன்த பெரோ போன்ற பலர் அவரது பாடல்களுக்கு இசை அமைத்தனர்.சில பாடல்களை அவரே இசையமைத்துப் பாடினார். களிகம்பு, கவாலி, றபான் போன்ற முஸ்லிம் மக்களுடைய பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் பணியிலும் இவர் ஈடுபட்டதாக அறிய முடிகிறது.

எல்லாப் பாடல்களும் இன சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் மையப்படுத்திய பாடல்களாக இருப்பதனை நாம் அவதானிக்கலாம்.

எத்தனை தூரம் நாம் நடப்போம்?

எங்கள் மனிதன் மானிடனாய் மலர

எத்தனை காலம் காத்திருப்போம்?

வெள்ளைப் புறாவின் வேதனைகள் அகல

தென்றலில் நற்சேதி

மிதந்து வந்திடுமா?

…துலாக் கிணறு தரும் நீரும்

துன்ஹிந்த அத்தர நீரும்

ஒரே குளிர்ச் சுகம் ஈனும்

உடல் மனம் இதம் காணும்

குடாவிளை செம் மிளகாய்

கண்டி தரும் பசும் மிளகாய்

ஒரே உறைப்பினைக் காட்டும்

மனிதருள் ஏனோ பேதம்..

இலங்கை போன்ற பல்லின சமூகப் பண்பாட்டில் மனிதத்தை உயர்த்தியே அவரது பாடலும் எழுத்தும் அமைந்திருந்தது.

 

வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே ,போர்க்களமது தனியே, கருமேகம் கலையாதோ என்பன அவரது புகழ்பெற்ற பாடல்களாகும்.

அறிவுத் தாரகை (கலாச்சார அமைச்சு) ,“உண்டா“ (ஒலிபரப்புத் துறைக்கான விருது) ,சமாதான விருது (மக்கள் சமாதான இலக்கிய அமைப்பு) ,இலக்கிய விருது (கொழும்புப் பலைக்லைக் கழகம்) ,பல்கலை வித்தகர் (அம்பாறை மாவட்ட க.ப சங்கம்) ,சமாதான விருது (கல்வியமைச்சு) ,சாகித்திய விருது (இலங்கை அரசு),இசைப்பாடல் துறைக்கான விருது (ப்ரியநிலா கலாலயம்) ஆகிய விருதுகளையும் அவர் பெற்றார்.

அவரது பாடல் ஆக்கம் 1994 இல் உச்சம் தொட்டது.“வெள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே“ பாடல் அவரது பாடலுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும்.அவருக்கு மனநிறைவைத் தந்த படைப்பாக அவர் அதனைக் கருதுகிறார்.காற்றில் மிதக்கும் ஒரு அழியாத காவியம் போலத்தான் அப் பாடல் எல்லோர் நெஞ்சிலும் நிலைத்திருக்கிறது.

 

அவர் எழுதிய சிறுவர் பாடல்களுக்கு அவரே இசையமைத்தார். 21 பாடல்கள்  “வண்ணத்துப்பூச்சு“ என்ற பெயரில் ஒலிப்பேழையாக வெளிவந்தது. சிறுவர்களுக்காக வெளிவந்த ஒரு அரிதான பாடல் தொகுப்பு அது.

நெஞ்சுரம் கொண்ட ஒரு படைப்பாளியாக ஷம்ஸ் நம் கண்களுக்கு முன்னால் தெரிகிறார். சமூக அநீதிகளுக்கு எதிராக அவரது பேனா எழுதியது. பல்வேறு விமர்சனங்களையும் ஏச்சுக்களையும் அதற்காக அவர் பரிசாகப் பெற வேண்டியிருந்தது.அவர் தளர்ந்துவிடாமல் தொடர்ந்து இயங்கினார்.

“அவர் அந்திம காலத்தில் “முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்வைக்கப்படுகின்ற யதார்த்தத்தை மறந்த கற்பனாவாதப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்ட சநாதனவாதங்களும்,தீவிரவாதங்களும் மக்களைப் படுபாதாளத்தில் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. இவற்றுக் கெதிராகப் போராடுவது தலையாய கடமை“ என்று எழுதினார்.

“இல்லாத மாயைகளை கற்பனையாக எழுதி எழுத்துலகை ஏமாற்றுவது படைப்பாளியின் பணியல்ல. வேஷங்களை முகம்கிழித்துக் காட்டி சமூக அநீதிகளை ஒழிக்கும் பாரிய கடமைப்பாடு எழுத்தாளனுக்குண்டு. எனவேதான்,  எழுத்தை ஒரு தவம் என்பார்கள். உண்மை, நேர்மை,கருணை என்பவற்றை பற்றுக் கோடாகக் கொண்டு மனிதநேய இலட்சியம் நோக்கி படைப்புப் பணியைத் தொடருங்கள்.” என்பதே அவரது கொள்கையாக இருந்தது.

ஒரு படைப்பாளிக்கு இக் கொள்ளை முக்கியமானது.ஷம்ஸ் அவர்கள் பல ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட ஒருவர்.இன்னும் அவரது படைப்புகள் நூலுருப் பெறக் காத்திருக்கின்றன.அவற்றை நிறைவு செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் 2002 ஆம் ஆண்டு அவர் எங்களை விட்டுப் பிரிந்தார்.அவரை என்றாவது ஒரு நாள் சந்திப்பேன் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசியில் அது கைகூடவில்லை.