“கிராமம்,பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது.சுருக்குப் பைகளின் உலகம் வேறு உலகம்.அதன் முடிச்சுக்கள் பிரியங்களால் ஆனவை. காலத்தின் இடுப்பில் அதே பழைய வாஞ்சையுடன் நிராதரவாய்த் தொங்கிக் கொண்டிருப்பவை.அதன் எளிமையும் அழகும் எந்தவிதத்திலும் நம்மை நோக்கிச் சவால் விடாதவை.

ஒரு மலைப் பிரதேசத்துக் காற்று மாதிரி எப்போது கேட்டாலும் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் எடுத்துக் கொடுக்க,அதில் இன்னமும் சில்லறைகள் இருந்து கொண்டிருக்கின்றன…மாநகரம் அப்பாவின் சட்டைப் பையில் உள்ள ரூபாய் நோட்டுக்களைப் போன்றது.அப்பாவின் உலகம் திறக்கவே முடியாத கதவுகளால் ஆனது.அதன் ஒவ்வொரு வாசலிலும் கண்டிப்புகளால் ஆன கனத்த பூட்டு.“ நா.முத்துக்குமார்

இன்றைய உலகில் கிராமத்திற்கும் மாநகரத்திற்குமான இடைவெளி பெரிதும் குறைந்து விட்டது.கிராமங்கள் கூட நகரமயப்பட்டுவிட்டன. இருந்தாலும் கிராமத்தில் இருக்கும் ஏதோ ஒன்று மாநகரத்தில் இல்லாமலே இருக்கிறது.மாநகர வாழ்க்கை என்பது வாழ்வில் மகிழ்ச்சிகளைத் தருவது போல கசப்புகளையும் தந்துவிடுகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் ஊரை விட்டு மாநகரத்திற்குப் போய்ப் போய் வருகிறேன்.ஒவ்வொரு முறை ஊரிலிருந்து புறப்படும் போதும் என் இருப்பைப் பிய்த்தெடுப்பது போன்ற ஒரு உணர்வுடனேதான் வெளியேறுகிறேன்.

சொந்த ஊர் என்பது எவ்வளவுதான் பிரியங்கள் நிறைந்ததாக இருந்தாலும் சொந்த வீட்டின் இனிமைகளைத் துறந்து செல்லும் மணப் பெண் போல ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அதனைப் பிரிந்துதான் ஆக வேண்டியிருக்கிறது. தொழிலுக்காக,கல்விக்காக என பல காரணங்களுக்காக மாநகரங்களை நோக்கி நம் வாழ்வு நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

முதன்முதலாகக் கொழும்புக்குச் சென்ற போது கட்டிடங்கள் நிறைந்த காடொன்றுக்குள் நிற்பது போல இருந்தது.பாதைகளோ திசைகளோ எதுவும் புரியவில்லை.மெல்ல மெல்ல மாநகரம் அதன் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குள் என்னை இழுத்துச் சென்றது.வாரத்தில் ஐந்து நாட்கள் மாநகரத்தில் கழிகிறது வாழ்க்கை.தொலைத்த மகிழ்ச்சிகளை மூட்டை கட்டிக் கொண்டு மீதி இரண்டு நாட்களில் கிராமம் திரும்புகிறது வாழ்க்கை.ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் பாடசாலை செல்ல அடம்பிடிக்கும் குழந்தையின் மனதுடனேயே மாநகரம் நோக்கிய பயணம் ஆரம்பமாகிறது.

இது எனக்கு மட்டுமல்ல எத்தனையோ மனிதர்களுக்கு இதுவே விதியாகிப் போய் இருக்கிறது. வாழ்வாதாரத்தை தேடும் நெடும் பயணத்தில் கடல்களைக் கடந்தும் மனிதர்கள் வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் புகைவண்டிகளிலும் பேரூந்துகளிலும் மக்கள் கூட்டம் நகரங்களை்யும் மாநகரங்களையும் வந்து சேர்கின்றது.இளைஞர்கள் கலர் கலர் கனவுகளுடன் மாநகரங்களில் வந்திறங்குகிறார்கள்.மாநகரத்தின் வசீகரம் அவர்களை வரவேற்று தன் மடியிலே அவர்களை இருத்திக் கொள்கிறது.

வெய்யில் நிறைந்த மாநகர வாழ்க்கையில் உணவு என்பதுதான் ஆதார பிரச்சினையே.குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினை குறைவுதான்.என்றாலும் மாநகரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் துரித உணவுக்குப் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவசர அவசரமாக காலையில் தொழிலுக்குச் செல்லத் தயாராகி பிள்ளையை கடைக்கு அழைத்துச் சென்று ஏதாவது ஒரு துரித உணவை உணவுப் பெட்டிக்குள் வைத்து பாடசாலைக்கு அனுப்பிவிட்டு தானும் தொழிலுக்குச் சென்று,மறுபடி பிள்ளையை அழைத்து வரும் போது மாலையாகிவிடும்.இரவுச் சாப்பாட்டிற்கும் உறக்கத்திற்கும் நேரம் சரியாக இருக்கும்.இயந்திரமான ஒரு வாழ்க்கை ஒவ்வொரு நாளும் அவர்களுக்காகக் காத்திருக்கும்.

பக்கத்து வீட்டாருடன் சுகம் விசாரிக்கவோ உறவுகளைத் தரிசிக்கவோ நோயாளிகளை நலம் விசாரிக்கவோ மரணச் சடங்குகளில் கலந்து கொள்ளவோ எந்த அவசியமும் அங்கு இல்லை.
மாநகரத்தில் பல வீடுகளில் பல நேரங்களில் அடுப்பெரிவதில்லை.கடைச் சாப்பாட்டுடன் எல்லாம் முடிந்துவிடுகிறது.வெந்நீரைக் கூட காசு கொடுத்து வாங்கும் நிலை மாநகரத்தில் வந்துவிட்டது.இது எப்பேர்ப்பட்ட சோம்பேறித்தனம்.

ஏமாற்றிப் பிழைப்பதில் மாநகரத்தில் உள்ள உணவகங்கள் முன்னணியில் நிற்கின்றன.எதைக் கொடுத்தாவது காசாக்குவோம் என்பதுபோல் இருக்கிறது அவர்களது நடவடிக்கை.

ஒரு நாள் காலை உணவை உணவகமொன்றில் எடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டு அதிகாரிகள் திடீரென அங்கு வந்து முதலாளியை வரும்படி அழைத்தனர்.கடையின் உணவுகளை பரிசோதனைக்கு உட்படுத்தும் அரசாங்க அதிகாரிகள் அவர்கள்.முதலாளியுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் இருவருக்கும் இரண்டு குளிர்பானம் எடுத்து வரப்பட்டது. ஒரு அதிகாரி அதனை திருப்பி அனுப்பினார்.கடை முதலாளி சற்று பதற்றத்துடன் காணப்பட்டார்.அவர்கள் இரண்டு பொலித்தீன் பைகளில் உணவு மாதிரிகளைப் பெற்றுக் கொண்டனர். எனக்கு எழுந்து சென்று அனைத்து உணவுகளில் இருந்தும் மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

மாநகரத்தில் பெரும்பாலான உணவகங்களில் உணவு சமைக்கும் இடத்தைப் பார்த்தால் குமட்டலாக வரும்.பார்வை அங்கே விழாது பார்த்துக் கொள்வதுதான் எமக்கு நல்லது.

“நல்லெண்ணெய் முதல் நல்லெண்ணம் வரை“ எல்லாவற்றிலும் கலப்படம்தான் என்று புதுமைப் பித்தன் கூறிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

மாநகரங்களில் எல்லா வீடுகளுக்கும் போல மதில்களும் அடைப்புகளும் இருக்கின்றன.தமது எல்லைக்குள் எல்லோரும் உறவுகளைச் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்பது தெரியாமலேயே பலர் வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் நினைப்பதே இல்லை.
மாநகரத்தில் நாளுக்கு நாள் கட்டிடங்கள் வானை நோக்கி எழுகின்றன. மின் விளக்குகளால் வீதிகள் அலங்கரிக்கப்படுகின்றன. பூங்காக்கள் சீர் செய்யப்படுகின்றன.ஆனால் எவ்விதத்திலும் முன்னேறாத மனித வாழ்க்கை மாநகரங்களில் இருக்கத்தான் செய்கின்றது.சேரிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை என்பது எத்தனை துயர் மிகுந்தது என்பது அவர்களைக் கடந்து செல்லும் போது புரிகிறது.காபன் புகை காற்று மண்டலத்தைக் காயப்படுத்துகிறது.தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன.மாநகரத்தில் ஒரு பட்டாம்பூச்சியைக் கூட காண முடிவதில்லை.

ஒரு தடவை ஆட்டோவில் புகையிரத நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.கொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரத்திற்குப் பக்கத்தால் வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. இதற்குச் செலவிடும் பணத்தில் அரிசியின் விலையைப் பாதியாகக் குறைத்தால் ஐந்து வருடங்களுக்கு நிம்மதியாகச் சாப்பிடுவோம் என்றார் சாரதி. கட்டிடங்கள் உயர்ந்த அளவுக்கு மனித வாழ்க்கை உயரவில்லை என்பதுதான் உண்மை.உடற்பயிற்சிக்காக வடிவமைக்கப்படும் இடங்களும் வாகனம் உள்ளவர்களுக்குத்தான் பயனளிக்கின்றன.

தெருக்கள் வழியே மாலை நேரங்களில் உணவுப் பண்டங்கள் விற்கும் பலரைப் பார்க்க முடிகிறது.சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தெருக்களின் ஓரங்களில் தம் வாழ்வாதாரங்களைத் தேடி நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறார்கள்.தூரே தெரியும் உயரமான கட்டடங்களைப் பார்த்துக் கொண்டே அவர்களது பொழுது கழிகிறது.

மதுபானம்,போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் பலர் இன்று கிராமங்களிலும் நகரங்களிலும் மாநகரங்களிலும் இருக்கிறார்கள். மாநகரங்களிலிருந்தே இவை விற்பனையாகின்றன. தெருக்கள் தோறும் மதுபான சாலைகள் இருக்கின்றன.போதையில் வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் மனிதர்களையும் போதைப் பொருள் வாங்க பிச்சை எடுக்கும் கூட்டத்தையும் அன்றாடம் காணலாம்.

கேளிக்கை விடுதிகளிலும் விபச்சார விடுதிகளிலும் கிராமங்களிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த யுவதிகள் சீரழிக்கப்படுகிறார்கள்.எல்லா அனாச்சாரங்களையும் சுவர்களும் மின்விளக்குகளுமே நன்கு அறியும். இவை எல்லாவற்றையும் மாநகரங்களின் இரவுகள் தம் ரகசியப் பெட்டிக்குள் பூட்டிக் கொள்கின்றன.

‘வாழ்க்கை எப்படியெப்படியோ நிர்ப்பந்திக்கும் போது மனிதர்கள் எப்படியெப்படியோ வாழ்கிறார்கள்’.என்றார் ஜெயகாந்தன்.நிர்ப்பந்தங்களே கிராமங்களை விட்டு மனிதர்களை வெளியேற்றுகிறது.இதனால் நிர்ப்பந்தக்களுக்கேற்ப மனிதர்கள் வாழ்வை மாற்றிக் கொள்கிறார்கள். பெற்றோரை,மனைவியை,பிள்ளைகளை விட்டுப் பிரிந்து ஒரு புதிய வாழ்க்கைக்கு தம்மை ஒப்புவிக்கிறார்கள்.பிரிவென்ற ஒற்றைச் சொல் அவர்களைத் துரத்துகிறது.அதன் பிடியிலிருந்து அவர்கள் தப்புவதே இல்லை.

பதற்றத்துடன் தேடலின் கரங்களைப் பற்றியவாறு மாநகரங்களில் மனிதர்கள் பயணப்படுகிறார்கள்.அன்பும் மனிதாபிமானமும் பணத்தின் வாடையற்ற இடங்களில் சிந்திக் கிடக்கின்றன.பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மனிதனைக் கொலை செய்யும் வெண்நிற ஆடை அணிந்த கறை படிந்த மனிதர்கள் அங்குதான் வாழ்கிறார்கள்.தமது இருப்புக்காக யாரையும், எதனையும் அழிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மனிதன் தன் சக்தியால் மாநகரங்களை வடிவமைத்தான்.அவற்றை வசீகரமாக்கினான்.வெளிச்சங்களால் அவற்றைப் பிரகாசிக்கச் செய்தான். நா.முத்துக்குமார் சொல்வது போல “நதி நகர்ந்து வந்தால்தான் கடலை அடைய முடியும்.நாகரிகமும் நதியைப் போன்றது.ஒரு நாட்டின் முதுகெலும்பு கிராமம் என்றால்,மாநகரமே அதன் மூளையாக இருக்கிறது.மாநகரங்கள் மனித குல வளர்ச்சியின் குறியீடு. “இயற்கையின் அமானுஷ்யப் பெருவெளிக்கு முன்,நான் அற்பமானவன் இல்லை. புள்ளிக்கும் புள்ளியாய் என் இருப்பைச் சுருக்க முடியாது“ என, மனிதன் தன்னைக் காட்டிக் கொள்ள எழுந்தவையே மாநகரங்கள்.“

பெரு நகரமான சென்னைக்கு அண்மையில் சென்றிருந்தேன்.பரபரப்பான வீதிகளில் திரளான மக்கள் கூட்டம் போய்க் கொண்டே இருப்பதனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.எங்கு போகிறீர்கள் என்று யாரிடமும் கேட்க முடியாது.மனித வாழ்க்கை எதையோ தேடி விரைகிறது. கொழும்பை விட நூறு மடங்கு பெரிய நகரம் அது.அதன் பரபரப்பே தனியானது.
இரவு நேரத்தில் மொட்டை மாடியிலிருந்து பார்க்கும் போது மட்டும் அமைதியாகக் காட்சி தருகிறது மாநகரம்.காலையானதும் மறுபடி பரபரப்பு. சாலைகள் தோறும் மனிதக் கூட்டம் போய்க் கொண்டே இருக்கிறது. பிரமான்டமான வானத்தின் கீழே அணைக்கப்படாத மின் விளக்குகளுக்குக் கீழ் புள்ளியாய் மறைகிறது வாழ்க்கை.