இன்றைய நாட்களில் அதிகமான திடீர் மரணச் செய்திகள் கேள்விப்பட்ட வண்ணமே இருக்கின்றன. நினைத்திராதவர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு விடை சொல்லிக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு மரணச் செய்தியும் வாழ்க்கையின் பிடிமானத்தை சற்றே ஆட்டம் காணச் செய்கிறது.நமக்குப் பரிச்சயமான,அறிமுகமானவர்களின் மரணம் இரட்டிப்பு வலியைத் தருகிறது.

அண்மையில் எழுத்தாளர் குமரகுரூபரனின் மரணச் செய்தி கேட்டு மனம் நெகிழ்ச்சியடைந்தது.அவரது “மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது“என்ற நூல் மூலம்தான் அவர் மீதான எனது வெளிச்சம் விழுந்தது. இருந்தாலும் ஒரு எழுத்தாளனின் மரணம் அந்தரங்கத்தின் இறுகிய பிடியை கொஞ்சம் தளர்த்திவிடுகிறது.
கடந்த வருடம் இது போல ஒரு மரணத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. என் மனைவியின் தாத்தா ஒருவருடைய மரணம் அது.புற்றுநோயின் வாதையுடன் அவர் பல வருடங்களைக் கடத்தியவர். வைத்தியர் மரணத்திற்கு குறித்த நாளையும் கடந்து பத்து வருடங்கள் அவர் வாழ்ந்தார்.

மாதத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவது அவரது வழக்கமாக இருந்தது.சில நாட்களில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்.கடைசியாக அப்படித்தான் ஒரு பகல் பொழுதில் அவர் சிகிச்சைக்காகச் செல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.தன் நோயின் சுமையுடன் மாடியிலிருந்து தானாகவே இறங்கி வந்தார்.அதுதான் மருத்துவமனைக்கான அவரது இறுதிப் பயயணமாக இருந்தது.

அவரைப் பார்ப்பதற்காக நானும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம்.அவர் நினைவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தார்.தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருந்தார்.

எல்லா நோயாளிகளும் சிகிச்சை முடிந்து விடு திரும்புவோம் என்றுதான் காத்திருக்கிறார்கள்.சிலர் வீடு திரும்புகிறார்கள்.சிலர் உலகத்தை விட்டே திரும்புகிறார்கள்.

சக்கர நாற்காலியில் வைத்து அவரை வெளியே அழைத்து வந்தேன்.ஒரு குழந்தையின் செயலை ஒத்திருந்தது அவரது செயற்பாடுகள்.அவரை வீட்டுக்கு அழைத்துப் போவதாக அவர் நினைத்திருப்பார்.
கொழும்பில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக தகவல் சொன்னார்கள்.அவரது மரணத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.இரண்டு வருடம் ஒன்றாக அவரை நடமாடிப் பார்த்திருக்கிறேன்.இப்போது மீளாத் துயிலில் இருந்தார்.

அவருக்கென்று குழந்தைகள் இல்லை. அவரது இறுதிக் கிரியையான தொழுகையை நானே முன்னின்று நடாத்தினேன்.நமக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் இல்லாமல் போகும் போது ஏற்படும் வெற்றிடத்தை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது.அவர் நம்முடன் வாழ்ந்தார் என்பதும் அவர் விட்டுப் போன நினைவுகளும்தான் அந்த வெற்றிடத்தை ஓரளவுக்கேனும் நிரப்ப முயற்சிக்கின்றன.அவர்கள் நம் வாழ்காலங்களில் ஒரு போதும் மீண்டும் குறுக்கிடுவதே இல்லை.நம் பாதைகளில் ஒருபோதும் அவர் நம்மைக் கடப்பதில்லை.உயிர்ப்புள்ள நினைவுகள் மட்டுமே நம்மைப் பின்தொடர்கின்றன.

ஒரு மனிதனின் வாழ்க்கையின் இறுதித் தருணங்கள் உறைகின்ற நிமிடங்களாகத்தான் தெரிகின்றது.அந்த நிமிடங்கள் அப்படியே நம்மை ஆட்கொள்கின்றன.யாரும் மரணிக்கின்ற தருணங்களில் சமமீபமாக இருந்து பார்த்த அனுபவம் இல்லை.ஆனாலும் மரணத்தை எதிர்கொள்கின்ற சில தருணங்களைப் பார்த்திருக்கிறேன்.
அண்மையில் உறவுக்காரச் சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.மருத்துவமனை ஒரு தனி உலகமாக இருக்கிறது.அந்த உலகின் நடமாட்டத்தினை நான் வெகுநேரமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். துரத்தும் நினைவுகளை மருத்துவமனை எனக்குத் தந்து கொண்டே இருந்தது. சிகிச்சைக்காக வரும் நோயாளிகள்,விபத்தில் சிக்கியவர்கள்,மரணித்தவர்கள், எத்தனை வகையான நிகழ்வுகள்.

வெளியிலிருந்து பார்க்கும் போதுதான் அது எத்தனை அமைதியாகத் தெரிகிறது.உள்ளேதான் எத்தனை கண்ணீர்க் கதைகள்…?தறல்கள்…?

நோயுடன் போராடும் மனிதர்களை சமீபமாக இருந்து பார்க்கும் போதுதான் வாழ்க்கை மீதான வெறுப்பும் நம்பிக்கையின்மையும் ஒருசேர ஏற்படுகிறது. இருந்தாலும் வாழ்வதை நிறுத்திவிட முடிகிறதா என்ன? வாழ்ந்துததான் ஆக வேண்டும் என்ற உணர்வு மறுபடியும் வாழ்க்கையின் பிடிமானத்தை இழுத்துக் கட்டுகிறது.
இப்படியாக குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்களை,நண்பர்களின் மரணங்களை, ஊர்க்காரர்களின் மரணங்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொருவருடனும் எனக்கு ஒரு அழகிய நினைவு இருக்கத்தான் செய்கிறது.சிலருடனான நினைவுகள் அடிக்கடி ஏதோ ஒரு பொழுதில் தோன்றி மறைகின்றன.அக் கணம் அவர்களுடனான காலத்தை நோக்கி தன் சிறகுகளால் தூக்கிக் கொண்டு பறக்கின்றது.

நான் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்த போது எகிப்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் இருந்தார்.அவரது பெயர் அப்துஷ் ஷாபிஈ.கம்பீரமான தோற்றம் கொண்டவர்.எனக்கு அவரது கற்பித்தல் மீது அக்கறை இருக்கவில்லை. இருந்தாலும் அவருடன் கதைப்பது சுகம் விசாரிப்பது என ஒரு தொடர்பும் நேசமும் இருக்கவே செய்தது. இடைக்கிடை குடும்பம் எப்படியிருக்கிறது என்று விசாரிப்பார்.

திடீரென ஒருநாள் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். இங்குள்ள மருத்துவமனையினை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.நாங்கள் மருத்துவமனைக்குப் போனோம் .அந்த அன்பு அவரை நெகிழ்ச்சியடையச் செய்தது.கண்களில் நீர் பெருக அழுதார்.பிறகு அவர் நாட்டிற்குச் சென்று சிறது நாட்களில் அவரது மரணச் செய்தி வந்தது.இன்றும் நான் அவரது மரணத்தை நினைத்து கவலை கொள்கிறேன். அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலேதான் இருக்கிறது.இத்தனை சீக்கிரம் அவர் மரணிப்பார் என்று நான் நினைக்கவில்லை.அவர் மரணித்து பல வருடங்களாகியும் அவர் என் நினைவில் தோன்றவே செய்கிறார்.

இப்படித்ததான் எல்லா மனிதர்களும் யாருடையவோ மரணத்திற்காக அழுது கொண்டும் வருந்திக் கொண்டும்தான் இருக்கின்றனர்.நாம் விட்டுப் போகும் அழகிய செயல்களும் நினைவுகளும்தான் நம்மை இந்த உலகில் பேசுபொருளாக்குகிறது.
நமது பயணம் மரணத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மூச்சும் புதைகுழிக்கு அருகாமைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.நம்மைப் பற்றிப் பேசவும் கதைக்கவும் பகிரவும் நாம் என்ன சேமித்திருக்கிறோம், விட்டுச் செல்லப் போகிறோம் என்பதுதான் இந்த உலகில் நமது வாழ்க்கையை கணிப்பிடப் போதுமானது.
குமரகுரூபரனின் புத்தகத் தலைப்புதான் இதனை முடிக்கும் போது மறுபடி நினைவுக்கு வருகிறது. “மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது“ எத்தனை பெரிய உண்மை அது.வாழ்க்கையை மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாதுதான்.

• இத் தலைப்பு எழுத்தாளர் நகுலனுக்கு சொந்தமானது.அவரது கவிதையிலிருந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன்.