சுமார் எட்டு வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் வெளிவந்திருக்கிறது ஹாபிஸ் இஸ்ஸதீனின் “அரும்பு“ சஞ்சிகை. இச் செய்தியறிந்ததும் தொலைபேசியில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.காரணம் அரும்பு சஞ்சிகை நின்றுவிட்ட கவலை மனதில் இருந்து கொண்டே இருந்தது.என்னைப் போலவே பலரும் அவரிடம் மீண்டும் அரும்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டே இருந்தனர்.இன்று அது நிஜமாகியிருப்பது மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.

இலங்கையில் தமிழ் பேசும் வாசகர்களை, குறிப்பாக மாணவர்களை மையப்படுத்தி வெளிவரும் சஞ்சிகைகளின் தரம் குறித்து பல கேள்விகள் இருக்கின்றன.அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆக்கபூர்வமான விடயதானங்களைச் சுமந்து வருவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

ஆனால் அரும்பு சஞ்சிகை மாணவர்களால் மட்டுமல்லாது ஏனையோராலும் விரும்பிப் படிக்கப்படும் ஒரு சஞ்சிகையாக இருக்கின்றது.அதற்குக் காரணம் அது தாங்கி வரும் கட்டுரைகளும் தகவல்களும் துணுக்குகளும் நகைச்சுவையுமாகும். அரும்பு சஞ்சிகையை அதில்வரும் நகைச் சுவையைப் படிப்பதற்காகவே பலர் வாங்குவதுண்டு.

நாம் பெரும்பாலும் காணும் சஞ்சிகைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகள் இணையத்திலிருந்து சுட்டவையாகத்தான் இருக்கும்.ஆனால் அரும்பின் நகைச்சுவைகளை ஹாபிஸ் அவர்கள் தான் வேறு மொழியில் படித்தவற்றை தமிழுக்கு மாற்றி தனது பிள்ளைகளிடம் படிக்கக் கொடுத்து தேவையான இடங்களில் அவர்கள் சிரிக்கிறார்களா என்று பரீட்சித்து அதனை பிரசுரம் செய்வதாக ஒருமுறை சொன்னார்.

இந்த உழைப்பும் முயற்சியும் அரும்பிலுள்ள எல்லாக் கட்டுரைகளுக்குப் பின்னாலும் இருக்கிறது.அதுதான் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் அரும்பு மீண்டும் துளிர்க்காதா? என்ற ஏக்கத்திற்குக் காரணம்.அத்தோடு இச் சஞ்சிகை குறிப்பிட்ட ஒரு சாராரை மாத்திரம் கவத்தில் கொண்டு வெளியிடப்படுவதில்லை.தமிழ் பேசும் அனைவருக்குமான ஒரு சஞ்சிகையாக இருப்பதும் இதன் வெற்றிக்குரிய ஒரு காரணமாகும்.

ஒரு தனியாளாக இருந்து கட்டுரைகளை எழுதி, தட்டச்சு செய்து, வடிவமைத்து,அச்சிட்டு, வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி வரை அவர் தனியாளாகவே மேற்கொள்கிறார். என்னைப் பொறுத்தவரையில் அரும்பின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான்.ஆனால் வெளியீட்டு நிறுவங்களே தமது வெளியீடுகளை முறையாகச் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் 42 இதழ்களை வெளியிட்டமையும் ஒரு சாதனை எனத்தான் சொல்ல வேண்டும்.

அரும்பு நின்றிருந்த காலத்தில் பலரும் இதனை வெளியிட முன்வந்திருக்கிறார்கள். ஆனால் ஹாபிஸ் அவர்கள் அதனை பெரிதாக விரும்பவில்லை.காரணம் அதன் தரத்தை இழக்க அவர் ஒரு போதும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.

மாணவர்களுக்கான சஞ்சிகை வெளியிடுபவர்களுக்கு அரும்பு ஒரு முன்மாதிரியான சஞ்சிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஒரு பொது அறிவுச் சஞ்சிகை என்ற வகையில் அது மாணவர்களாலும் படிக்கப்படுகிறது. மாணவர் அல்லாதவர்களாலும் படிக்கப்படுகிறது.இலங்கையின் போர்ச் சூழலில் கூட அரும்புக்குரிய கிராக்கி இருக்கவே செய்தது. யுத்தப் பிரதேசங்களில் இச் சஞசிகையை விற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.நான் அறிந்த வகையில் சுமார் 5000 பிரதிகள் வரை விற்பனையாகிக் கொண்டிருந்தன.

வாசிப்புக் கலாச்சாரம் குறைந்து வரும் இன்றைய சூழலில் அரும்பு போன்ற ஒரு சஞ்சிகையை ஊக்குவிப்பதும் பிறருக்கு அறிமுகம் செய்வதும் அறிவுச் சமூகத்தின் கடமையாகும். மாணவர்களுக்கான வெளியீடுகள் எமது சமூகத்தில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. மாணவர்களுக்கானது என்ற பெயரில் வெளிவரும் அத்தனையும் தரம் வாய்ந்தவை என்று சொல்லிவிடவும் முடியாது.இது போன்ற ஒரு சூழலில் எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளிவரும் இச் சஞ்சிகையை சமூக நிறுவனங்களும் பாடசாலை சமூகமும் நிச்சயம் தாங்கிப் பிடிக்க வேண்டும்.அதனது தொடர்ச்சியான வரவிற்குப் பங்களிக்க வேண்டும்.

“இப்பணியை எவ்வளவு காலத்திற்கு தொடர எமக்கு வாய்ப்புக் கிடைக்குமோ தெரியாது“ என இவ்விதழில் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.இது தொடர்ந்தும் வெளிவர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.இப் பயணம் தொடர வேண்டும்.இதன் பிரதிகளை வாங்கியும் புதிய வாசகர்களைத் திரட்டியும் அரும்பின் தொடர்ச்சியான வருகைக்கு நாம் அனைவரும் கைகொடுப்போம்.பங்களிப்போம்.

அரும்பு இதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள-
Editor,Arumbu
No.70 Main Street, Dharga Town -12090
0342270151