“இன்னும் தாதி கழுவாத
இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின்
பழைய சட்டை என்று ஏதும் இல்லை
பழைய வீடு என்றும் ஏதும் இல்லை
மெல்லத் திறக்கும் கண்களால்
எந்த உலகை புதுசாக்க வந்தாய்,
செல்லக்குட்டி அதை
எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி”
தேவதச்சன்

ஒரு குழந்தையின் வரவில் இந்த உலகமே மகிழ்கிறது.பெண்மையின் மகத்தாக பொறுமையிலும் அவள் தாங்கிக் கொள்ளும் வேதனையினாலும் எல்லோரையும் சிரிக்க வைக்கிறாள்..ஒரு பிரசவம் என்பது நூறு வீதமும் பெண்கள் எதிர் கொள்வது.அதிலிருக்கும் சுகமும் வேதனையும் மலைகளின் பாரத்தைத் தன்னுள் புதைத்துக் கொண்டு அவள் படும் அவஸ்தையும் பார்வைக்குப் புலப்படுவதில்லை.ஆணுக்கு அதில் என்ன பெரிய பங்கு இருந்துவிடப் போகிறது.
ஒரு பெண் கருவுற்றது முதல் அவள் இரண்டு உலகங்களைத் தன்னகத்தே சுமக்க ஆரம்பிக்கிறாள்.அவளது முழு வாழ்க்கையும் எதனிடமோ ஒப்புக் கொடுக்கப்படுகின்றது.வரம்புகளும் எல்லைகளும் அவளைச் சூழ வந்துவிடுகின்றன.தன் சிறகுககளை மெல்ல அவள் மடித்துக் கொள்கிறாள்.

கருவில் இருக்கும் குழந்தை எப்படி இருக்கிறது.அது எப்படிப் பிறக்கப் போகிறது?யாரைப் போல இருக்கப் போகிறது? இது போன்ற ஏராளமான கேள்விகள் கணவன் மனைவிக்கிடையில் வந்து போகத்தான் செய்கின்றன.பெண் குழந்தையைச் சுமக்கிறாள்.ஆன் எதிர்பார்ப்புக்களைச் சுமக்கிறான்.

பிரசவத்திற்கான காலம் நெருங்க நெருங்க பதட்டமும் பயமும் அதிகரிக்கின்றது.எமக்கான ஒரு வாரிசை எதிர்பார்க்கும் தருணம் அது.நம் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் குழைத்துச் செய்யப் போகும் ஒரு கலவை அது.

ஒரு குழந்தை உருவாகும் முறையே ஆச்சரியமும் அற்புதமும் நிறைந்ததுததானே!எத்தனை முறை நினைத்தாலும் அது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது.,இறைவனின் பெருங் கொடை அது.

மனைவியைப் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நாட்களில் என் இதயமெங்கும் வெறுமை பரவிக் கிடந்தது.உலகம் என் தலைக்குள் சுற்றிக் கொண்டிருந்தது.திருமணத்தின் முதற் பரிசைக் காண்பதற்காய் நான் வைத்தியசாலையில் காத்து நின்றேன்.பயமும் பதட்டமும் என் கால்களினூடு இதயம் நோக்கிப் படர்ந்து கொண்டிருந்தது.

குழந்தைகள் இந்த வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு பாக்கியம்.ஆனால் அப் பாக்கியம் இல்லாமல் பலர் இருக்கத்ததான் செய்கிறார்கள்.மனித வாழ்க்கையில் இறந்த காலம் ஒரு நினைவு போல இருக்கிறது.எதிர்காலம் கனவு போல இருக்கிறது.நிகழ்காலமே யதார்த்தமாக இருக்கிறது.யதார்த்ததே ஆயிரம் பாடங்களைக் கற்றுத் தருகிறது.

சுதந்திரமாகத் திரியும் எல்லோருமே திருமணம் என்ற விசாலமான வட்டத்திற்குள் உட்படத்தான் செய்கிறோம்.பின்னர் இரு தொகுதி விருப்பங்களின் கூட்டுக் கலவையுடன் விட்டுக் கொடுத்தும் கொடுக்காமலும் மன்னித்தும் மறந்தும் நாம் வாழப் பழகிக் கொள்கிறோம்.

பொதுவில் நாம் திருமணம் முடித்து சில காலத்திலேயே குழந்தைகளை உருவாக்கிக் கொண்டு விடுகிறோம்.ஒரு பெண் திருமணத்தின் பின்னர் சிறிது காலமே சுதந்திரமான சுகங்களை அனுபவிக்கிறாள்.பின் சுமையுடன் கலந்த சுகம்தான் வாழ்க்கை முழுவதும் நீடிக்கிறது.

ஒரு பெண் கருவுற்றது முதல் அவள் குழந்தையைப் பெற்றெடுத்து,பால் கொடுத்து பராமரித்து ஆளாக்கி திருமணம் முடித்துக் கொடுப்பது வரையுள்ள தொடர் போராட்டத்தில் முக்கால் பகுதித் துயர் அவளுடையதாகவே இருக்கிறது.இது சமூகத்தில் எழுதப்படாத விதியாகவும் மாற்ற முடியாத ஒன்றாகவுமே இருந்து வருகிறது.
ஒரு குழந்தையைப் பராமரிப்பதை முற்றிலும் பெண்கள் சார்ந்ததாகவே ஆண் மனம் நோக்குகிறது.இதனால் எமது பெண்கள் சொல்ல முடியாமல் பல கசப்புகளை தாங்கிக் கொண்டுதான் வாழ்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்தது முதல் அது வளரும் ஒவ்வொரு தருணமும் தனித்த மகிழ்ச்சியைக் கொண்டது.அழுகை,சிரிப்பு,கண்ணசைவு,என ஒவ்வொரு வயதிலும் அது எங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டே வளர்கின்றது. அத்தகைய தருணங்களை நாம் மனப் பெட்டிக்குள் சேமித்துக் கொள்கிறோம்.சொல்லிச் சொல்லி மகிழ்கிறோம்.

ஒரு குழந்தை தன் மழலைப் புன்னகையினால் வரட்சியான வாழ்க்கையில் நீரை ஊற்றுகிறது.அர்த்தம் புரியாத வார்த்தைகள் அவர்களின் வாயிலிருந்து உதிர்கின்றன.எங்களுக்கும் உலகத்திற்குமாக குழந்தைகள் எதையோ சொல்ல நினைக்கின்றன. சூழ இருப்பவர்களை மகிழ்ச்சியின் நதியில் நிறைய வைக்கின்றன குழந்தைகள்.
குழந்தைகள் தமக்கென பிரத்தியேகமான சொற்களைக் கொண்டிருக்கின்றன. சில போது ஒரே சொல்லை அவர்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறார்கள். சில சொற்களை அவர்கள் திரும்பப் பயன்படுத்துவதேயில்லை. வார்த்தைகளின் குகைகளுக்குள் அவற்றை மறைத்துக் கொள்கின்றார்கள்.நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அவர்களின் வார்ததைகள் வளர்கின்றன. பின்னர் எங்கள் வார்த்தைகளால் நாம் அவற்றைத் திருடி விடுகிறோம்.
நாட்கள் செல்லச் செல்ல சொற்களின் பொட்டலத்தை மெல்லப் பிரித்து சந்தர்ப்பத்திற்கேற்ப வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது குழந்தை. இப்படித்தான் வளர்ந்தவர்களின் உலகோடு குழந்தை தன்னை சரிசெய்து கொள்கிறது எனத் தெரிகிறது. பின் ஒரே வார்த்தைகளால் நாம் தொடர்பு கொள்கிறோம். நாம் மகத்தானது எனக் கருதும் மொழிகளை குழந்தைகளின் உலகில் திணிக்கிறோம். அது உச்சரிப்புத் தவறும் போது கடிந்து கொள்கிறோம். குழந்தைக்கும் எமக்குமான மொழி ஒரே கோட்டில் பயணிக்கத் தொடங்குகிறது. அவர்களின் மொழியையும் உணர்வுகளையும் நாம் மெல்லப் பறித்துக் கொள்கிறோம்.

இப்படியாக ஒவ்வொரு வயதிலும் நாம் எமது குழந்தைகளைக் கொண்டாடுகிறோம்.அவர்களது செயல்கள் எம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றன.எமது உள்ளம் அவர்களையே சுமந்து வாழத் தொடங்கிவிடுகிறது.
இருந்தாலும் குழந்தைகளைக் கொண்டாடும் உலகத்திலிருந்து நாம் மெல்ல மெல்ல விடுவிக்கும் ஒரு காலம் எல்லோருக்கும் வரத்தான் போகிறது. நாங்களும் பெற்றோர்களிடமிருந்து எம்மை அப்படி விடுவித்துக் கொண்டவர்கள்தாம்.

குழந்தை வளர்ப்பைப் பற்றி எவ்வளவு படித்தாலும் ஒரு குழந்தையை அந்த முறையில் வளர்த்து விட முடியாது.அது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்தது.குழந்தை வளர்ப்பு குறித்துப் பேசுபவர்கள் எல்லாம் என்ன நல்ல வாரிசுகளையா படைத்துப் பரிசளித்திருக்கிறார்கள்.

குழந்தைகள் வளர வளரத்தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன. பெற்றறோரிடம் சார்ந்திருக்கும் தேவையை விடுவித்துக் கொள்ளும் போதுதான் இரு தரப்புக்குமான இடைவெளி தோன்ற ஆரம்பிக்கின்றது.
மனுஷ்யபுத்திரன் சொல்வது போல “குழந்தைகள் ஒவ்வொரு படியாக தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.அவர்கள் சுயேச்சையான மனிதர்களாக மாற மாற பெற்றோர்கள் மீதான தங்கள் சாய்மானத்தை கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறார்கள்.ஆனால் அன்பின் பிடிமானமும் இறுக்கமும் பரிதவிப்பும் இந்த சார்ந்திருத்தலில்தான் இருக்கிறது.அவர்கள் நம் முன்னாள் அந்த சார்புகளை கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடும் போது நம் மனம் பேதலிக்கிறது.கடுமையான தனிமையுணர்ச்சியை அடைகிறது.’’

வாழ்க்கையின் யதார்த்தம் அப்படித்தான் இருக்கின்றது.குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.உயிராய் பராமரிக்கிறோம்.ஒரு கட்டத்தில் நாம் தனிமையின் தீவுகளில் சஞ்சரிக்கின்றோம்.இருந்தும் இந்த வாழ்க்கையை உதறித் தள்ளிவிட முடியாது.