கடந்த காலத்தை நினைத்து மகிழ்வதற்கும் வருந்துவதற்கும் ஏராளம் விசயங்கள் இருக்கின்றன.இன்றைய நவீன உலகின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எப்போதாவது நாம் அவற்றை நினைத்துக் கொள்கிறோம்.அல்லது ஒரு இரவு நேர உரையாடலில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்.நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்,நமது இளமையில் காலம் எப்படி இருந்தது என்ற விவரிப்பில் தொடங்கி ‘அதெல்லாம் ஒரு காலம்“ என்று பெருமூச்சு விடுவதில் முடிகிறது நமது உரையாடல்.

காலத்தின் சக்கரம் வேகமாகச் சுழல்கிறது.ஒவ்வொரு கணமும் இறந்த காலமாக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சமே எல்லோர் மனதிலும் நிழலாடுகிறது.கடந்த காலம் என்பது தொழில்நுட்ப உலகின் இமாலய வளர்ச்சிக்கு முன்னால் கடுகாகித் தெரிகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்களது அன்றாட விடயங்கள் எப்படி நடந்தன? என்பதெல்லாம் இன்று புருவங்களை வியக்க வைக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.தொழில்நுட்பமும் வசதி வாய்ப்புகளும் எங்களை சோம்பேறிகளாக ஆக்கியுள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால் ஒரு கிராமத்தின் விடியல் இன்றும் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. அதிகாலையில் எந்த அலாரமும் இல்லாமல் எழுந்து தனது தேவைகளை நிறைவேற்றும் மனிதனுக்கும் நகர்ப்புறங்களில் அலாரத்தையும் மீறித் தூங்கி துரித உணவுகளுடன் வேலைக்குச் செல்லும் மனிதனுக்கும் இடையிலான இடைவெளி ரொம்பப் பெரியது.அவன் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர் கொள்கிறான்.நகரத்திலிருப்பவன் வேண்டா வெறுப்புடன் தன் நாளைத் தொடங்குகிறான்.

கடந்த காலத்தின் வாழ்முறையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.அவர்கள் எத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர் என்பது புதிர் போல இருக்கிறது.இன்று எல்லாவற்றிற்கும் கருவிகள் வந்துவிட்டன.எல்லாத் தேவைகளுக்கும் இலகுவான வழி நம்முன்னே இருக்கிறது.எமது முன்னோர்கள் கருவிகள் இல்லாமலே எல்லாக் காரியங்களையும் சாதித்தனர்.உடல் தேயும் வரை உழைத்தனர்.அவர்களது உணவே மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் பாதிப் போர் நோய்களைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள்.உணவுக்குப் பின் மருந்தென்பது அநேகருக்கு விதிக்கப்படாத விதியாகிப் போயிருக்கிறது.

என் பால்யத்தின் நினைவுகளுக்குத் திரும்பும் போது சுவாரஷ்யமான நினைவுகள் என் ஞாபகப் பரப்பில் வந்து போகின்றன.சிறுவர்களாக இருந்த காலத்தில் விளையாடுவதற்கு ஏராளமான விளையாட்டுக்கள் இருந்தன. விளையாடுவதற்கான சுதந்திரமும் இருந்தது.இன்று குழந்தைகள் இயற்கையான விளையாட்டுக்களிலிருந்து விடுபட்டு திரைகளை வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றனர்.

கைப்பேசி மற்றும் கணிணி விளையாட்டுக்கள் மலிந்து போயுள்ள உலகில் ஒவ்வொரு குழந்தையும் தனிமையின் தீவுகளில் தமது விளையாட்டுக்களுடன் சஞ்சரிக்கின்றனர். பக்கத்தில் இருப்பவரை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.

அப்போதெல்லாம் டிசம்பர் மாதம் பட்டம் விடுவதற்கான காலமாக இருந்தது.பட்டத்துடன் வயல்வெளிகளில் அலைந்த ஞாபகம் மனதில் மெல்லச் சிறகடிக்கிறது.ஒரு பட்டத்தை செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதைச் செய்வதற்கு சில பேர் இருந்தனர்.அவர்கள் செய்தால்தான் அது உயரப் பறக்கும்.ஒரு பட்டத்தை எடுத்துக் கொண்டு ஓடும் தருணம் வானில் சிறகடித்துப் பறக்கும் தருணத்தை ஒத்தது.இன்று கடற்கரைகளில் செயற்கைப் பட்டங்களுடன் குழந்தைகள் நிற்கின்றனர். அவர்களது கால்களில் சேறு படுவதில்லை.பட்டத்தை எடுத்துக் கொண்டு வியர்வை வழிய அவர்கள் ஓடுவதில்லை.ஒரு பட்டம் அறுந்து போகும் போது மனதில் ஏற்படும் துயரை அவர்கள் உணர்வதில்லை. நாங்கள் வயல் வெளிகளில் விளையாடித் திரிந்தோம்.இன்றைய குழந்தைகள் அன்ரொய்ட் வெளிகளிலே காணாமல் போயிருக்கின்றனர்.

சிறுவர்களாக இருந்த போது டயர்களை எடுத்துக் கொண்டு வீதி நெடுகிலும் ஓடித் திரிவோம்.ஒரு வாகனத்தை ஓட்டுகின்ற மகிழ்ச்சியில் நாங்கள் திளைத்திருப்போம்.இன்று டயர்களுடன் விளையாடும் குழந்தைகளைக் காண முடியவில்லை.அவர்கள் இப்போது திரைகளில் வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என் பால்யத்திலே எனது தந்தை விவசாயம் செய்து கொண்டிருந்தார். இடைக்கிடை வயலுக்குச் செல்லும் வழக்கம் எங்களுக்கு இருந்தது.சேற்றில் இறங்கி விளையாடுவது தனியான சுகம் கொண்டது. முழங்கால் வரை சேற்றில் புதைவதும் எழுவதுமாகவும் தந்தையின் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதிலும் நேரம் போவதே தெரியாமல் இருக்கும்.பரந்த வானம் மகிழ்ச்சியைத் தூவிக் கொண்டிருப்பது போல இருக்கும்.

வயலுக்குப் பக்கத்திலிருந்த மேட்டு நிலத்தில் தக்காளி, வெண்டிக்காய், போஞ்சி,பச்சை மிளகாய் என பல வகையாக தந்தை விதைத்திருந்தார். அவை வளர்வதும் அதனைக் காண்பதும் மிகுந்த இன்பமாக இருக்கும். காய்களைப் பறிக்க அவருடன் ஒன்றாகப் போவோம்.பறித்து வந்ததும் அதில் கொஞ்சத்தை பக்கத்து வீடுகளுக்கு பகிர்ந்து கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது.எல்லா செயல்களிலும் நாம் கற்பதற்குப் பல பாடங்களும் பண்பாடுகளும் இருந்தன.

நாற்று நடுவதும் அது மெல்ல வளர்வதும் அறுவடைக்குத் தயாராவதும் எத்தனை இனிய நினைவுகள்.அறுவடை முடிந்ததும் நெற் கதிர்களின் மேலே நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஓடுவோம். நெல் மணிகள் வேறாகப் பிரியும்.பின் வைக்கோளை ஒரு இடத்தில் நிரப்பி அதில் ஏறி விளையாடுவோம்.

இன்று பாடசாலைக் கல்வி குழந்தைகளின் சுதந்திரத்தைப் பரித்துக் கொண்டு விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.ஹோம் வேர்க் செய்வதிலும் டியூஷன் வகுப்புகளிலுமே அவர்களது பெரும்பாலான நேரம் கழிகிறது.
நா.முத்துக்குமார் தனது புத்தமொன்றில் இப்படி எழுதியிருப்பார். ‘…நகரம் மற்றும் மாநகரங்களின் பால்யம் வேறு விதமானது.தடித்த கம்பிகளை வெறித்துக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை.அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஜன்னல்களில் காயவைத்த துணிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.ஒரு சட்டை கையை ஆட்டி ஆட்டிக் கேட்கிறது.“குட்டிப் பாப்பா இப்படியே காத்துல பறந்து போலாமா?“குழந்தை சொல்கிறது.“ஹோம் வேர்க் எழுதனும்.மிஸ் அடிப்பாங்க“

கால மாற்றத்திற்கேற்ப எல்லாம் மாறுகின்றன. பழைய காலத்தின் நினைவுகள் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன.புதிய உலகம்,புதிய சவால்கள் எல்லாமே புதுசு.வாழ்க்கை மட்டும் பழைய காலத்திலே இருக்கிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவுகளில் விளக்கின் துணையுடன் அனைவரும் வீட்டின் ஒரு இடத்தில் கூடிக் கதைத்துக் கொண்டிருப்போம்.அப்போதெல்லாம் சுவரின் மீது விழும் நிழலின் மீது ஒரு மோகம் இருந்தது.அதைப் பார்த்துக் கொண்டிருப்பது தீராத ஒரு விருப்பமாக இருந்தது.இருந்தாலும் நிழலைப் பார்க்கக் கூடாது.நிழலைப் பார்த்தால் குட்டையாவோம் என்று என் தாய் கூறிக் கொண்டே இருப்பார்.அதை நினைத்துப் பயந்து போயிருக்கிறேன். விளக்கின் வெளிச்சத்தில் நினைவுகள் கரைந்து கலையும் தருணத்தை எப்படிப் பதிவு செய்வது என்று தெரியவில்லை.

வானத்தில் எப்போதும் நிலா இருக்கிறது.அதை ரசிப்பவர்கள்தான் இல்லை.வீட்டு முற்றத்தில் இரவு நேரங்களில் கூடிக் கதை பேசுவதும் சிரித்து மகிழ்ந்திருப்பதும் இன்று அரிய ஒரு தருணமாகவே இருக்கிறது.
இன்று இயந்திர உலகில் நாம் பரபரப்பாக இருக்கிறோம்.குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறூட்டும் தாய்மார்களைக் காண முடியவில்லை. தொலைபேசித் திரையில்தான் அனைத்தையும் காட்டுகிறோம்.
குழந்தைகளுக்கு ஒரு கதையைச் சொல்லும் ஆர்வமும் அதற்கான பொறுமையும் இன்று இல்லாமல் போயிருக்கிறது.எமது முன்னோர்கள் கதைகளைச் சொல்லியும் பாடல்களைப் பாடியும் குழந்தைகளைத் தூங்க வைத்தார்கள்.அது ஒரு மரபாகவும் இருந்தது.இன்று அதெல்லாம் நமக்குத் தேவைப்படுவதில்லை.காலம் கடந்ததாக அவற்றைக் கருதுகிறோம்.

கடந்த காலத்தில் இருந்த ஏதோ ஒன்று இல்லாத இடைவெளி இன்றைய வாழ்வில் இருக்கத்தான் செய்கிறது.எமக்கான பண்பாடுகளை, கலாசார அடையாளங்களை, உணவுமுறையை ஏன் வாழ்க்கை முறையைக் கூட நாம் மாற்றிக் கொண்டுவிட்டோம்.ஒரு கிராமத்துச் சமையலை இன்று நாம் கொண்டாடுவதில்லை. உலகமயமாதல் எங்கள் சமையலைக் கூடப் பறித்துக் கொண்டுவிட்டது.

ஆரோக்கியமாகச் சாப்பிடுவதை விட சுவையாகச் சாப்பிடுவதுதான் இன்றைய உணவுக் கலாசாரத்தில் முக்கியம் பெறுகிறது.மருந்துகள் அற்ற ஆரோக்கியமான கிராமத்து உணவுகளை இன்றைய தலைமுறை தமது தெரிவுக்குள் கொண்டு வருவதில்லை.அப்படியே வீட்டில் சமைத்தாலும் அவற்றை உண்பதும் இல்லை.வீட்டில் உள்ள முதியவர்கள்தான் அவற்றையெல்லாம் எப்படியாவது சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

நவீன வாழ்க்கை முறையில் ஒவ்வொரு விடயங்களிலும் மாறுதல்கள் வந்துவிட்டன.நாம் அந்த மாறுதல்களைப் புறக்கணிக்க முடியாது.ஏற்றுக் கொண்டு முன் செல்ல வேண்டும்.அதற்காக கடந்த காலத்தின் வாழ்க்கை முறையில் உள்ள நல்ல அம்சங்களை,எமது பண்பாட்டுடன் ஒத்திசைந்த தன்மைகளை ஏன் நாம் புறந்தள்ளி விட்டு நவீன வாழ்க்கைக்கு முற்றிலும் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்.