இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பின் தங்கிய ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் தனது நாட்டிற்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை தனது வாழ் நாள் கனவாகக் கொண்டவர். இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அவரது கனவு நனவாகவில்லை. இக் கனவை தனக்குப் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையால் நனவாக்க முடியும் என்று நம்புகிறார்.அவருக்குப் பிறக்கும் நான்கு பிள்ளைகளும் பெண் பிள்ளைகள்.தன் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு வேறு தொழில் பார்க்க ஆரம்பிக்கிறார்.

ஆனால், தன்னுடைய சண்டையிடும் திறன் தன் மகள்களான கீதாவுக்கும் பபிதாவுக்கும் இயல்பாக இருப்பதை ஒரு சிறிய முறைப்பாட்டின் போது உணர்ந்து கொள்ளும் மஹாவீருக்கு தன் கனவின் மீது மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது. ஆண் ஜெயித்தால் என்ன பெண் ஜெயித்தால் என்ன தங்கம் தங்கம்தான் என்ற முடிவுக்கு வருகிறார்.ஊரார்களின் ஏளனப் பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு அவர் தன் மகள்களுக்கு மல்யுத்தப் பயிற்சி கொடுக்கிறார். மஹாவீரின் தங்கப் பதக்கக் கனவு அவருடைய மகள்களால் எப்படி நனவாகிறது என்பதுதான் ‘தங்கல்’ திரைப்படத்தின் சாரம்.

அமீர் கானின் அண்மைய படங்கள் சமூக யதார்த்தங்களை மையப்படுத்தியே வெளி வந்திருக்கின்றன. வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து நல்ல படைப்புக்களை அவர் வழங்கி வருகிறார்.அந்தவகையில் இத் திரைப் படமும் மேற்படி உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

விளையாட்டின் வழியே நகரும் கதைக் களம் அப்பாக்களின் கனவுகள்,விளையாட்டு சார்ந்த அரசியல்,சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி,சமூகத்தில் பெண்னின் இடம் என பல்வேறு விடயங்களினூடு விரிந்து கிளை பரப்புகிறது.

மல்யுத்தம் என்பது ஆண்களுக்கானது என்பதைக் கடந்து எந்த விளையாட்டாக இருந்தாலும் கடின உழைப்பும் பயிற்சியும் மன உறுதியும் இருந்தால் யாருக்கும் வெற்றி பெற முடியும் என்பதை உரத்துச் சொல்கிறது தங்கல்.
மஹாவீர் தன் கனவை தனது மகள்கள் மீது திணிக்கிறார்.அப்பாக்களின் கனவுகளால் வதைபடும் பிள்ளைகள் இந்த உலகில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.அதையும் இக் காட்சிகள் தத்ரூபமாகச் சித்தரிக்கத் தவறவில்லை.
இருந்தாலும் அவரது திணிப்பின் பின்னாள் உள்ள நியாயத்தையும் வலிமையான காட்சிகளில் அவர் பதிவாக்கியிருக்கிறார். திருமணம் முடித்துக் கொடுத்து வீட்டுப் பெண்ணாக உங்களை ஆக்காமல் நீங்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே தான் அப்படி நடந்து கொள்வதாக தந்தை சொல்வார். பெண் சிசுக் கொலைகளும், குழந்தைத் திருமணங்களும் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு மாநிலம் ஹரியாணா எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு தருணங்களும் திரைப்படத்தில் அழகாகக் கடந்து போகிறது.

உண்மையில் பெண்களின் திறமைகளும் ஆளுமைகளும் சமையலறையிலே மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலமைக்கு எதிரான ஒரு குரலாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மஹாவீரைப் போல சிந்திக்கும் அப்பாக்கள் மிகக் குறைவாகவே இந்த உலகில் இருக்கின்றனர்.அவர் போன்ற அப்பாக்களே தம் பிள்ளைகளை உயரத்தில் நிறுத்துகின்றனர்.

dangal-759

எல்லா மகன்களும் மகள்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெற்றோரிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு தருணம் இருக்கிறது.கீதா தேசிய விளையாட்டுப் பயிற்சிக் கழகத்திற்குந் சென்று விடுமுறையில் வீடு வருகிறார்.தந்தையளித்த பயிற்சிகளில் சில குறைகள் இருப்பதாக்க் கூறுகிறாள்.அப்பாவும் மகளும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.அப்பாவின் உடல் பலவீனத்தைப் புரிந்து கொள்ளாமல் வேகமாக மோதுவாள் கீதா.

தன் பேச்சை இப்போது மகள் கேட்பதில்லை என்பதை நினைத்து மஹாவீர் வருந்தும் தருணமானது எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தும். இத் தருணம் படத்தில் மிக அற்புதமாக இது காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ராமின் ஒளிப்பதிவும், பிரீத்தமின் இசையமைப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.யாரும் மிகையாக இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.இயல்பான நகைச்சுவைக் காட்சிகள்,கிராமத்தின் நினைவுகள் என அழகிய தருணங்கள் மனதில் தங்கி நிற்கின்றன.

மல்யுத்தம் குறித்த அடிப்படை விளக்கங்களும் படத்திலிருந்து கிடைக்கின்றன.ஒரு கலைஞனின் பிரக்ஞைபூர்வமான ஈடுபாடு எந்த ஒரு படைப்பிற்கும் அவசியம்.அமீர் கான் இப் படைப்பை கலாபூர்வமாக மாற்றுவதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்திருக்கிறார். இயக்குநர் நிதேஷ் திவாரியின் உழைப்பும் இங்கு முக்கியமானது.மொத்த்த்தில் ஒரு திரைப்படம் கூட்டு முயற்சியினாலேயே கைகூடுகிறது.அவரவர் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.இதனால் தங்கல் திருப்தி தருகின்ற ஒரு திரைப்படமாக இருக்கின்றது.
எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்த மல்யுத்த வீர்ர் மஹாவீர் சிங் தன் மகள்களைக் கொண்டு தேசத்திற்குப் பெருமை தேடிக் கொடுத்தார்.அவர்களுடைய உழைப்பிற்கான கண்ணியத்தை மறுபடியும் இத் திரைப்படம் வழங்கியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

‘பதக்கம் வெல்பவர்கள் மரத்தில் வளர்பவர்கள் அல்ல.அவர்களை பாசத்தாலும் மன உறுதியாலும் கஷ்டத்தாலும் உருவாக்க வேண்டும்.“ என்பார் மஹாவீர் சிங்.வாழ்க்கையின் எல்லா விடயங்களுக்கும் இது பொருந்தும்.