எல்லா ஊர்களிலும் விசித்திரமானவர்களும் ஸ்வாரஷ்யமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் நாம் நெருங்கிப் பழகுவதில்லை. இருந்தாலும் அவர்களது வார்த்தைகளையும் செயல்களையும் நாம் ரசிக்கத் தவறுவதில்லை.அத்தகைய பாத்திரங்கள் எம் நினைவில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

மனித உறவில் அத்தகையவர்கள் எங்கு இருக்கிறார்கள்,அவர்களுக்கு நாம் தரும் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் யோசித்துப் பார்க்கும் போது நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நான் வசிக்கும் ஊரிலும் அத்தகைய மனிதர்கள் என்னைக் கடந்து போகின்றனர்.அவர்களது செயல்கள் விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றன.புரிந்து கொள்ள முடியாத ஒருகனவு போலத்தான் அவர்களது வாழ்க்கையும் இருக்கிறது.அவர்களை நாம் பரிதாபத்தோடு பார்க்கிறோம் அல்லது ஏளனத்துடன் பார்க்கிறோம்.அல்லது மொத்தமாக பைத்தியம் என்று ஓரங்கட்டி வைத்து விடுகிறோம்.

சிலபோது இயற்கையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக சிலர் பிறக்கின்றனர்.சிலரை இந்த உலகம் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்கிறது.அவர்கள் தமது நிலையை ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை.பார்வையற்ற ஒருவருக்கு இந்த உலகம் இருளாகத் தெரிவது போல மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் மீதும் புறக்கணிப்பின் இருள் எப்போதும் விழுந்துகொண்டுதான் இருக்கின்றது.

மாநகரத்தில் தொழுகைக்காக நான் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு சிறுவனை எதிர்கொள்வது வழக்கம். மனநிலை பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவன் எப்போதும் பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் பணம் கேட்டு அமர்ந்திருப்பான். அவன் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கும் வருவதுண்டு. ஒரு நாள் தொழுகை முடிந்து வரும் போது தன் பொக்கட்டினுல் கையை விட்டு 10 ரூபாயை எடுத்து முன்னால் இருந்த யாசகனுக்குக் கொடுத்தான்.அவரோ அவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்துக் கொண்டிருந்தார்.அதனிலும் ஆச்சரியம் என்னவென்றால் மறுகனமே அவன் கைகளை ஏந்திக் கொண்டு நின்றிருந்ததுதான்.

அவனது நடத்தையும் அவனது முகமும் என் ஞாபகத்தில் அழியாமல் இருக்கிறது.அவனைப் போல பல சிறுவர்களை, வயோதிபர்களை, பெண்களை நான் ஒவ்வொரு தெருவிலும் எதிர்கொள்கிறேன். வாழ்க்கையின் சுகங்களை அவர்கள் இழந்திருக்கிறார்கள்.இதனால் அவர்களைப் பெற்றவர்களும் தம் சந்தோசங்களை எங்கோ ஒரு புள்ளியில் இறக்கி வைத்திருப்பார்கள். ஏன் அவர்கள் அப்படியானார்கள் என்கின்ற கேள்வி திரும்பத் திரும்ப மனதில் எழுந்து கொள்வதைத் தடுக்க முடியவில்லை.இருந்தாலும் அக் கேள்விக்குப் பதிலளிக்கும் சக்தி எம்மிடத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

எனது ஊரிலும் அப்படியான ஒரு பெண் இருந்தார்.அவருக்கு 45 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.ஒரு மாதிரியான மனநிலை கொண்டவர்.தெரு நெடுக எதையாவது சொல்லிக் கொண்டு, யாருக்காவது ஏசிக் கொண்டுதான் செல்வார். பிரதேசத்தின் கிளைமொழி அவர் வாயிலிருந்து அத்தனை அற்புதமாக வெளியேறும். அந்தப் பேச்சில் ரசிப்பதற்கு ஏதோ ஒன்றிருந்தது.

ஊரில் யார் வீட்டிலாவது ஏதேனும் விழாவோ வைபவமோ இருந்தால் அது எல்லோருக்கும் அறியும் படி செய்துவிடுவார்.அதே போல அவருக்கு யாரேனும் நலவோ கெடுதியோ செய்தாலும் அப்படித்தான்.பணமோ பொருளோ கொடுத்தால் அதிகம் மகிழ்வார்.

ஊர் மொழியின் கொச்சைப் பாஷையில் அவர் சொல்லிச் செல்லும் வார்த்தைகள் இன்னும் காதோரம் இருக்கின்றன.அவை யாருக்கும் சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. ஒரு பிரதேசத்தின் மொழியை அப்பிரதேசத்தவர்கள் பேசிக் கொண்டால் அல்லது கேட்டால்தான் அம் மொழியில் சுவாரஷ்யம் இருக்கிறது.வட்டிலப்பத்தின் சுவை போலத்தான் அதுவும்.

அவர் என்னைப் “பொலிஸ்காரன்“ என்றுதான் அதிக சந்தர்ப்பங்களில் அழைப்பார்.சில போது “கண்ணாடி“ என்பார்.ஏனெனில் நான் கண்ணாடி அணிந்திருப்பதால்.இருந்தும் நான் அவரை ஒருபோதும் கடிந்து கொண்டதில்லை.

குளிர் காய்வதற்காக அவர் அடுப்பை மூட்டிவிட்டு முன்னால் அமர்ந்திருந்திருந்த போது திடீரெனத் தீ மேனியில் தாவி எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்து போனார்.அவருடைய மரணம் மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.

இத்தகைய பாத்திரங்களின் எல்லாச் செயல்களும் ரசிக்கப்படவே செய்கின்றன. கடைத் தெருக்களில் அவை ஸ்வாரஷ்யமான பேசு பொருளாகக் கதைக்கப்படுகின்றன.அத்தகையவர்களின் மரணம் எல்லோரையும் கண் கலங்கவே செய்துவிடுகின்றது என்பதனை நான் பல தடவை கண்டும் கேட்டுமிருக்கிறேன்.

நாம் பெரும்பாலும் இத்தகையவர்கள் மரணித்த பின்னர்தான் அவர்கள் மீது அதிக அன்பு செலுத்திப் பார்க்கின்றோம்.வாழும் காலங்களில் அவர்களுக்குரிய கௌரவத்தை நாம் வழங்குவதில்லை. மனித வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. இத்தகைய மனிதர்களுக்கு நாம் பொது வாழ்வில் எந்த அங்கீகாரத்தையும் வழங்குவதில்லை.நமது சபைகளில் அவர்களை நாம் வரவேற்பதில்லை. நமது பக்கத்து இருக்கையில் அவர்கள் அமர்வதை விரும்புவதில்லை. பணமும் பொருளும் அழகும் இருப்பவர்களைத்தான் உலகம் கொண்டாடுகிறது.
மனித வாழ்க்கை நிறையப் புதிர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றை எங்களால் அவிழ்க்க முடிவதேயில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் போல உடலில் அங்கவீனம் கொண்டவர்களும் நமக்கு மத்தியில் வாழத்தான் செய்கிறார்கள்.

இன்று உலகம் அவர்களை மாற்றுத் திறனாளி என்று அழைக்கின்றது. அவர்கள் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் நாம் அத்தகையவர்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பொது வெளியில் அவர்களை சரியாக அடையாளப்படுத்தவும் இல்லை.

வானத்தைக் கூடக் காட்டாமல் மரணிக்கும் வரை வீட்டுக்குள்ளே வைத்து அவர்களது வாழ்க்கைக்கு பிரியாவிடை சொன்னவர்கள் எமக்கு மத்தியில் இல்லாமல் இல்லை.நாம் அவர்களை வெளியே அழைத்து வரத் தயங்குகிறோம்.வாழ்க்கையின் இருண்ட குகைகளுக்குள் அவர்களை விட்டு விடுகிறோம்.

ஊணமுற்ற ஒரு குழந்தை பிறக்கும் ஒவ்வொரு நொடியிலும் தமது முகங்களை சுழித்துக் கொள்ளும் பெற்றோர்கள்தான் இந்த உலகில் அதிகம்.ஒரு சிலரே வாழ்க்கையின் சுகங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.ஏனையவர்கள் வீட்டை விட்டு வெளியே அவர்களை அழைத்து வரவும் தயங்குகிறார்கள்.
மற்றவர்களை நினைத்து நினைத்து தம்மை இழந்தவர்கள்தான் இந்த உலகில் அதிகம். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சுகிறோம். இதனால் நாம் அவர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தாமல் விட்டுவிடுகிறோம். வாழ்க்கையின் கடைசிப் படிகளில் அவர்கள் நின்றுகொள்கிறார்கள்.

ஏன் இப்படி ஒரு குழந்தை பிறந்தது என்ற கேள்வியுடன் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் இவர்களது பெற்றோர்கள்.அழுவதும் கவலை கொள்வதும் நியாமானதுதான்.அதற்காக காலம் முழுவதும் அப்படியே வாழ்ந்துவிடுவதால் யாருக்கு லாபம் கிடைக்கப் போகிறது.

அங்கவீனமாகப் பிறக்கும் ஒரு குழந்தை ஏன் வீட்டுக்குள்ளேயே வளர வேண்டும்.அடைக்கப்பட்ட வாழ்க்கையை ஏன் அவர்களுக்கு நிர்ப்பந்திக்கின்றோம். சக்கரநாற்காலியின் துணையுடன் அல்லது ஏதேனும் ஒரு வாகனத்தின் உதவியுடன் ஏன் இந்த உலகை அவர்கள் வளம் வரக் கூடாது.பூக்களையும் மரங்களையும்ஏன் அவர்கள் கடந்து போகக் கூடாது?

நாம்தான் அவர்களுக்கு வாழ்க்கையை அள்ளிக் கொடுக்க வேண்டும்.நமது வாழ்க்கைப் பயணத்தில் அவர்களும் பக்கத்தில் இருக்க வேண்டும்.அனைவரும் இணையும் போதுதான் மனித வாழ்க்கைக்கும் அதன் உறவுக்கும் அர்த்தம் இருக்கிறது.எழுதப்படாத ஒரு கவிதையைப் போன்றதுதான் அவர்களது வாழ்வும். அதன் அழகையும் அர்த்தங்களையும் எமது கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

அத்தகையவர்களது வாழ்க்கையின் மூடப்பட்ட கதவுகளைத் திறந்து கொடுப்போம். எமது அன்பினாலும் அரவணைப்பினாலும் இந்த உலகை வெல்லும் சக்தியை அவர்களுக்குக் கொடுக்க முடியும்.அப்போது அவர்களும் வாழ்வைக் கொண்டாடுவார்கள்.