18 ஆவது லன்டன் ஆசிய திரைப்பட விழாவில் முதலாவது திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “sulanga apa ragena yawi’.இது தவிர சுமார் எட்டு சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.தற்போது பிரிஸ்பன் திரைப்பட விழாவுக்கு தயாராகும் இத் திரைப்படம் ஸ்டீவன் ஸ்பில் பேர்க் தனது முதலாவது திரைப்படத்திற்காக வென்ற ரெமி விருதை ஹுஸ்டன் திரைப்பட விழாவில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மட்டத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, கவனத்தைப் பெற்றிருக்கும் இத் திரைப்படம் விரைவில் இலங்கையில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இத் திரைப்படத்தை இன்னும் பார்க்காவிட்டாலும் இத் திரைப்படம் குறித்து இயக்குநருடன் உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.மிகுந்த சுவாரஷ்யத்தோடு நுவனுடன் உரையாடினேன்.நுவன் தற்போது லன்டனில் வசித்து வருகிறார்.இதோ அந்த உரையாடல்.

முதலில் நுவன் ஜயதிலக யார் என்று சொல்வீர்களா?

நான் ஒரு ஊர்சுற்றி.ஊர் சுற்றிச் சுற்றி வாழ்க்கையைப் புரிந்து கொண்ட ஒருவன். சிறுவயதிலிருந்தே கலை ஆர்வம் எனக்குள்ளே இருந்தது.நான் அங்குமிங்கும் அலைந்து கலை எனும் கரையில் ஒதுங்கியவன்.என் அனுபவங்களும் பால்யத்தின் நினைவுகளும் இப்போது கலையின் வழியே வெளிப்படுவதாக நினைக்கிறேன்.
நான் இரத்தினபுரியில் பின் தங்கிய ஒரு கிராமத்தில் பிறந்தவன். விவசாயம்,மாணிக்கம் போன்ற வியாபாரங்களினூடேதான் எங்களது வாழ்க்கை நகர்ந்தது.பாடசாலைக் காலத்திலிருந்தே நாடகத்திற்கான ஆர்வம் எனக்குள் துளிர்விட்டது.அது குறித்த தேடல் விரிவான தளங்களை நோக்கி அழைத்துச் சென்றது.அதுவே கனவுலகமாகிய பிறகு நான் கொழும்புக்கு வந்தேன்.நான் சட்டத்துறையில் படிக்க வேண்டும் என்பது வீட்டாருடைய விருப்பமாக இருந்தது.

1990 களில் நாடகக் கலைக்கு வந்த இலங்கைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். ஏனெனில் எங்களுக்கு கலையை முறையாகக் கற்க முடியவில்லை.இதனால் வாசிப்பு,சேர்ந்து பணியாற்றல் என்பவற்றினடியாகத்தான் கலையை நான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. நான் சட்டம் படிக்கவில்லை என்பதை அறிந்ததும் வீட்டிலிருந்து வரும் மாதாந்தத் தொகையும் இடைநிறுத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக முழுநேரமாக ஊடகத்துறையில் இணைந்தேன். ஊடகத்துறையில் உச்சம் தொட வேண்டும் என்ற கனவு என்னைப் பிடித்துக் கொண்டது.நான் புலனாய்வுக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்.யுத்த காலத்தில் புகைப்பட ஊடகவியலாளர்கள் என்னுடன் களத்துக்கு வர விரும்பவில்லை.எனவே ஒரு டிஜிடல் கமெரா எனக்குத் தரப்பட்டது.நான் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்ததும் இன்னுமொரு உலகம் எனக்குள் திறந்து கொண்டது.

அக்காலத்தில் நாடகக் கலைஞர்களிடத்தில் குறும்பட மோகம் ஒன்று ஏற்பட்டது.எனக்கும் அது விருப்பமாக இருந்தது.நான் பணியாற்றிய பத்திரிகை தடைசெய்யப்பட்டது.இக்காலத்தில் விமுக்தி ஜயசுந்தர எனக்கு அறிமுகமானார்.பின் அவருடன் பணியாற்ற ஆரம்பித்தேன். விளம்பரத்துறையில் 10 ஆண்டுகள் வரையான காலம் நான் பணியாற்றிறேன். புணே திரைப்படக் கல்லூரியில் சிறிது காலம் கற்க முடிந்தது.பிறகு ஐந்து குறுந்திரைப்படங்கள் எடுக்க முடிந்தது.இப்படியாக ஒரு முழு நீளத் திரைப்படத்தில் எனது கனவு மெய்ப்பட்டது.

hqdefault

நான் இன்னும் திபைபடத்தைப் பார்க்காத நிலையிலேயே உங்களுடன் உரையாடுகிறேன்.இப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்ல்லாமே?

இலங்கையின் மலைப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது.மலைகள்,அருவிகள் நிறைந்த இயற்கையின் மடியில் அக்குடும்பத்தின் இரண்டு சிறுவர்கள் வாழ்கிறார்கள்.பின் தங்கிய அவர்களது கிராமத்திலிருந்து தவளம் முறையில் பக்கத்திலுள்ள சிறிய நகரத்திற்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன..அவர்களது வீட்டில் ஒரு காளை மாடு இருக்கிறது. இதில் பொருட்கள் இழுப்பதின் மூலம் அவர்ளது வருமானம் கிடைக்கிறது.அதே நேரம் சிறுவர்களின் செல்லப் பிராணியாகவும் இது மாறுகிறது.ஒரு நாள் காளை மாடு திருடப்பட்டு கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.இதைப் பின்தொடரும் முயற்சியில் ஒரு சிறுவன் கொழும்புக்கு மரக்கறி கொண்டு செல்லும் லொறி ஒன்றில் ஏறி கொழும்பு மெனிங் சந்தையில் இறங்க நேரிடுகிறது.அங்கு சந்திக்கும் ஒரு சிறுமியுடன் சேர்ந்து கொழும்பு வீதிகளில் அதனைத் தேட எடுக்கும் முயற்சிதான் படம்.


இதற்கு மேல் சொல்ல மாட்டீர்களா?

படத்தைப் பார்த்துத்தான் நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இத் திரைப்படம் சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றதற்கான காரணம் இதனது திகைகதையா அல்லது தொழிந்நுட்பமா?

எல்லாம் சேர்ந்துதான் என்று நினைக்கிறேன்.உயர்தொழில் நுட்பக் கமெராவில் ஒளிப்பதிவு செய்தோம்.சர்வதேச சினிமா திரையிடல் முறையான சினிமா ஸ்கோப் முறையில் வெளியிட்டோம்.குரல் மற்றும் ஒலிப்பதிவு 6 ஒலிவாங்கிகளைப் பயன்படுத்தி ஒரே முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வர்ண மேம்பாடும் தரமான முறையில் செய்யப்பட்டுள்ளது.இசையைப் பொருத்தவரையும் ஐரோப்பியப் பாணியுடன் கலந்து தரமாகச் செய்ய முடிந்தது.திரைக்கதையிலும் விஷேட அம்சம் இருக்கலாம் இத்தாலிய திரைப்பட விழாவைத் தொடர்ந்து அங்கு திரைக்தையை சிலாகித்து பலர் எழுதியிருந்த்ததை அவதானிக்க முடிந்தது.

16 நாட்களில் இத் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து முடித்தோம். இலங்கையின் அழகை யாரும் பார்த்திராத வண்ணம் படமாக்கியிருக்கிறோம். பல்வேறு கமெராக் கோணங்களில் கொழும்பைக் காட்டியிருக்கிறோம்.இப்படியாக எல்லாம் சேர்ந்துதான் என்று நினைக்கிறேன்.

இதுவரையில் இத்திரைப்படம் எட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.இலங்கையிலும் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.மாற்றுத் திரையிடல் குறித்தே எனது கவனமும் தேடலும் இருக்கிறது.திரையரங்கில் காட்டி முடித்துவிடுவது எனக்கு விருப்பமாக இல்லை.மேலை நாடுகளில் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.எமது கலைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

இது ஒரு சிறுவர் படம் எனக் கொள்ளலாமா?

இது சிறுவர்களை மையப்படுத்தி இருப்பதால் அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.அனைவருக்கும் ரசிக்க முடியுமான ஒரு திபைபடமாக இருக்கும்.இது யாருக்கான படம் என்பதை ரசிகர்களும் விமர்சகர்களும் தீர்மானிப்பார்கள்.

17239957_10155088902342052_1494569588927039666_o


வணிக சினிமா மக்கள் மயப்பட்ட அளவு மாற்று சினிமா மக்கள் மயப்படவில்லை.அது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது ஒரு தொழிற்துறை.முதலீட்டின் அளவுக்குத்தான் அதனது பிரதிபளிப்பு இருக்கும்.இதனை உலக அளவில்தான் நாம் நோக்க வேண்டும்.சினிமாத் துறை ஒரு சூது போன்றது.மாற்று சினிமாக்கள் 90 களைத் தொடர்ந்து நீர்த்துப் போய்விட்டது என்பது எனது அவதானம்..பணம் பன்னுவதற்காகவே இன்று சினிமா எடுக்கிறார்கள்.மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கலைப் படங்களை எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆசிய சினிமாவை உலகின் உயர்ந்த இடத்திற்கு தூக்கி நிறுத்திய ஒருவர்தான் வொன்கா வாய். அகிரா குரோசோவும் அது போல ஒருவர்தான்.இவர்களது முதல் படங்கள் கலாபூர்வமானது.மாற்று அம்சங்கள் கொண்டது.சார்லி சப்லினையும் இங்கே குறிப்பிடலாம்.சத்ய ஜித்ரே.ஆரம்பத்தில் மிகுந்த சிரமங்களுடனே படங்களைத் தயாரித்தனர்.ஜேம்ஸ் பீரிஸ் கூட ரேகா போன்ற திரைப்படங்களை ஆறு மாதம் அளவில் தயாரித்தனர்.
பிக்காசோவின் ஓவியத்தை அனைவருக்கும் புரிந்து கொள்ள முடியாது அல்லவா? இன்று கலைப்படம் வணிகப் படம் என்று ஒன்றில்லை.முதலீடு செய்யும் அளவை வைத்தே படம் தீர்மானிக்கப்படுகிறது.

15016315_1105721356214594_2912348842071007387_o

இலங்கையில் நூடில்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன. ஹரிஸ்சந்திர நூடில்ஸ் ஆரோக்கியமானது.சத்துமிக்கது. ஆனால் மெகி நூடில்ஸ்தான் அதிக அளவில் விற்பனையாகின்றது. ஹரிஸ்சந்திர கோபி சிறந்தது.ஆனால் நெஸ்கொபிதான் அதிகம் விற்கப்படுகின்றது.ஏனெனில் அவர்களது விளம்பரமும் சந்தைப்படுத்தலும்தான் அதைச் சாத்தியப்படுத்துகின்றன. சினிமாத்துறையிலும் இதுதான் நடக்கிறது.

வணிக சினிமா மாற்று சினிமா என்பதை விட சினிமாவிற்கான விற்பனைச் சந்தை குறித்தே எனது கவனம் இருக்கிறது.ஏனெனில் கலைஞர்கள் தமது இருப்பு குறித்தும் கவலைப்பட வேண்டும்.

பிரான்ஸில் கான் திரைப்பட விழாவுக்கு வரும் படங்களும் இத்தாலியில் வெனீஸ் திரைப்பட விழாவிற்கு வரும் படங்களும் அதிக வருமானம் பெறுகின்றன. ஹொலிவூட் திரைப்படங்களே பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்க்கின்றன.ஈரானில் மஜித் மஜிதியைத் தெரிந்த அளவுக்கு அப்பாஸ் கியாரஸ்தமியைத் தெரியாது.இலங்கையில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸைப் புகழ்ந்தாலும் சோமாரத்ன திஸானாயகவைத்தான் மக்களுக்குத் தெரியும்.
ஐரோப்பாவில் ஒரு திரைப்படத்தை யாருக்கு எடுக்க வேண்டும், அதனை எப்படி சந்தைப்படுத்தலாம் என்பதனை திட்டமிட்டே செய்கிறார்கள்.நான் முதலீடு செய்கிறேன் என்று யாரும் குதிப்பதில்லை.ஆனால் இலங்கையில் அன்று தொட்டு இன்று வரைக்கும் சினிமாத் துறை தொழிற்துறையாக வளர்ச்சியடையவில்லை.முதலீடு செய்த தொகையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையே இலங்கையில் காணப்படுகிறது.

உங்களது திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்த விரும்பும் மாற்றம் என்ன?

அது பற்றி எனக்குத் தெரியாது.சமூகத்திடம்தான் அதைக் கேட்க வேண்டும்.அந்தக் கருத்து நிலையிலும் நான் இல்லை.இன்றைய உலகில் இந்த வாதம் அவசியமற்றது என்றே நான் கருதுகின்றேன்.1950 களில் இந்த வாதம் தீவிரமான முறையிலே இருந்தது.இன்றும் அது இல்லாமல் இல்லை.என்னைப் பொறுத்தவரையில் பார்ப்பவர்களே அதைத் தீர்மானிக்க வேண்டும்.

நவீன கலைஞர்கள் சர்வதேச திரைப்பட விழாக்களை மையப்படுத்தி திரைப்படம் தயாரிப்பது தமது சுயலாபத்திற்காகவே என்றொரு விமர்சனம் இருக்கிறது.இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரையில் அது உண்மைதான்.இத் திரைப்படத்தை நான் மிகுந்த சிரம்மப்பட்டு தயாரித்திருக்கிறேன்.இருந்தாலும் படத்தை நான் இலங்கையில் விற்க முடியாது.நான் அடுத்த படத்தை எடுக்க வேண்டும் எனில் இப் படத்தை சந்தைப்படுத்தித்தான் ஆக வேண்டும்.

இலங்கையில் ஒரு சமூகத்தார் மேற்கொள்ளும் கலை முயற்சிகள் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் பெரிய அளவில் போய்ச் சேர்வதில்லை, ஊடாட்டத்தை ஏற்படுத்துவதில்லை.அது ஏன்?

ஐரோப்பிய சூழலை எடுத்துக் கொண்டால் மக்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள்.அதற்கான திட்டமிடல் இங்கு இருக்கிறது.இலங்கையில் அதற்கான திட்டமிடல் இல்லை.அனைத்து இன மக்களையும் மையப்படுத்தி படங்கள் எடுப்பதன் மூலமே இதனைச் சாத்தியப்படுத்தலாம்.சுய லாபத்திற்காகவும்,அரசியல் நோக்கங்களுக்காகவும் கருப்புப் பணத்தை சுத்திகரிப்பதற்கும் எடுக்கப்படும் திரைப்படங்களில் இதனை காண முடியாது.சினிமாத் துறை இலங்கையில் பாரிய அளவு வளர்ச்சியடையவில்லை.புதிய தயாரிப்பாளர்கள்,இயக்குநர்களுக்கான வாயப்புகள் இல்லை.திரைப்பட விழாக்கள் இல்லை.

ஒரு ஓர் சுற்றியாக இருந்து ஊடகத் துறைக்கு வந்து விளம்பரத் துறையில் பணியாற்றி ஒரு இயக்குனராக சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது எப்படி இருக்கிறது?

நான் இருக்கும் இந்தக் கனம்தான் முக்கியம்.கடந்த காலத்தை நினைத்து நான் வருந்தவும் இல்லை.மகிழவும் இல்லை.இந்தக் கனத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன்.என்னை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளும்படி நான் யாருக்கும் அழைப்புவிடுக்கவில்லை. அப்படித் தேவை இருப்பின் அவர்களாகவே என்னைத் தேடிக் கண்டு கொள்வார்கள். Brisbane திரைப்பட விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.இந்த நேர்காணல் இத் தருணத்தில் மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது.ரொம்ப நன்றி இன்ஸாப்.

16178525_1191724237614305_4849834456612060134_o