நினைவு சிந்தனை என்பதன் குறியீடாக “போன்ஸாய்“ என்ற பூச்செடியை பிரஞ்சு மரபில் கூறுகின்றார்கள். நினைவுகளுக்கும் சிந்தனைக்கும் ஒரு பூச்செடியை குறியீடாக்கிப் பார்ப்பதன் அந்த மரபு எவ்வளவு துல்லியமும் மென்மையுமாகவிருக்கும் என்றொரு வியப்புப் தோன்றியது. ஏன் நம்முடைய நினைவுக்கும் சிந்தனைக்கும் இவ்விதமான  ஒரு வாழ்வியல் குறியீட்டை கொண்டிருக்கவில்லையே என்ற சிறு வருத்தமும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அவனது இயற்கை படைப்பாற்றலை குறியீட்டுச் சிந்தனைகளாக, அதன் அத்தாட்சிகளாக நம்முன் வைத்துள்ளான். அவ்வளவு வியாபகமானது அந்த ஆற்றல். மேலும் மனித இனமே இறைவனின் எல்லையற்ற பேரறிவின் சிந்தனையின் ஓர் வடிவமாகும். எவரும் நிராகரிக்க முடியாததோர் பேருண்மையாகும்.

“இலையில் தங்கிய துளிகள்“ எனும் உரைநடைக் கட்டுரைத் தொகுப்பின் மூலம், இன்ஷாப் இந்த வியாபித்தல்களை மனித நினைவுகளோடும் சிந்தனைகளோடும் அவரது ஆன்மாவின் பார்வைகளால் மொழியால் அவ்வப்போது சமூகத்திடம் பகிர்ந்து  வருகிறார்.

தான் சந்தித்த அனுபவங்களை விபரிக்கின்ற அவருடைய மொழி, வாசிக்கின்ற அனைவரையும் ஊடுருவக்கூடியது.

// ஒரு ரயிலைத் தவறவிடும்போது குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது. அவ்வளவு வேதனையை அது ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ரயிலைத் தவறவிட்டு தலையில் கைவைத்து மூச்சு வாங்குபவர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர் //

// நாடுகளின் ஊடாகவும் நாகரீகங்களின் ஊடாகவும் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. மனித வாழ்வே ஒரு பயணம்தான் என்பதின் அன்றாட சாட்சியாக பூமிப்பரப்பின் முதுகில் ரயில் ஊர்ந்து கொண்டே இருக்கின்றது //( காற்றில் கையசைத்து )

நாம் கவனிக்கத் தவறிய ஒரு முதியவரை மலையை பாடலை கவிதையை பிரிவை மரணத்தை இயற்கையை இலக்கியத்தை என தன்னில் தாக்கம் செலுத்திய ஏதோ ஒரு விடயத்தை நினைவூட்டுகின்றார். அதனூடாக நம்மை திரும்பிப் பார்க்க வைக்கின்றார். மேலும் அதன் வழியாக வாழ்வின் மூடப்பட்ட ஒரு ஜன்னலை அவரது எழுத்துக்கள் திறந்துவிடுகின்றன. உறைந்துபோயுள்ள மென் உணர்வுகளுக்கு வண்ணங்களை தடவுகிறார். நம்மை அசையும் உயிரோட்டமுள்ள நதியில் மிதக்கும்படி செய்கிறார். அவரது அவதானிப்புகளும் அறம் சார்ந்திருப்பவை. இன்ஷாபின் பேசுபொருள் மிக விரிவான நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. மென்மையான தொனி என்பது அவரது இயல்பும்கூட. தன்சூழலை நேசித்து அளவற்ற கரிசனையுடன் எழுத்துக்களில் பதிக்கின்றார்.

அவரவருக்கான விதிக்கப்பட்ட சுமைகள், தாம் விரும்பி ஏற்றுக்கொண்ட சுமைகள் என,

நம்ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாரங்கள் எத்தனையோ வகையானது.

நம் ஆபரணங்களால் துன்பத்தின் வெடிப்புகள் தெரியாமல் அலங்கரித்தோம். உயர்தரமான மென் புன்னகையால், தலையசைவால் எதிரே கடக்கும் யாரையும் எனக்கெந்த கஸ்டமும் இல்லையே என நம்ப வைக்க நாம் செய்யும்பாவனைகள் பல….

வாழ்க்கை என்பது எப்போதுமே நேரான கோட்டில் தங்கு தடையற்று பயணிப்பதல்ல. அதற்கான சவால்கள் என்பது ஆன்மீக ரீதியாகவும் பெளதீக ரீதியாகவும் ஒவ்வொருவரும் எதிர்கொள்கின்றோம். அனுபவங்கள் அடைவுகள் என நன்மை தீமை உயர்வு தாழ்வு என அனைத்தும் இரண்டறக் கலந்திருப்பது. இரு நிலைகளுக்கிடையான போராட்டத்தை எதிர் கொள்கின்றவனாக மனிதன் இருக்கிறான். இங்கே எழுத்தாளனின் முக்கியமான பாத்திரம் அவன் ஒரு தீர்ப்பிடும் நீதிபதியாக இயங்கமுடிவதில்லை. அதாவது தெரிந்தும் தெரியாமலும் தவறிழைத்தவனுக்காக வாதிடுபவனாகவே பல சந்தர்ப்பங்களில் இருக்க முடியும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களதும் நம்முடையதுமான அன்றாட வாழ்வு காயங்கள் அற்றதா.. துரோகங்கள் அற்றதா… தவறுகள் எதுவுமில்லாமல் மனிதருடைய வாழ்க்கை என்பது கழுவித்துடைத்த கண்ணாடிபோன்று பளிச்சென்று இருக்கிறதா அதனுள் மறைவான நிழல்கள் இல்லையா யாரும் கண்டுணராத வெடிப்புகள் இல்லையா.. ஆனால் நம்மில் அனேகர் உண்மைகளை எதிர்கொள்வதைவிட பாவனைகளின் தோற்றப்பாடுகளுக்கே முக்கியத்தவம் அளிக்கின்றோம். ஆக நமது மறுபக்கம் என்பதை நாமே கண்டுணர தயங்குகின்றவர்களாக இருக்கின்றோம். எனவே அழகை ஆனந்தங்களை பரவசங்களை வியப்பை காண்பதும் எழுதுவதும் ரசிப்பதும் மாத்திரம் ஒரு எழுத்தாளரின் தார்மீகப் பணியாகமாட்டாது. சமூகத்தின் உள்ளறன்களை அசைத்துப் பார்க்கும்விதம் எழுத்தாளன் செயற்பட வேண்டி நேர்கின்றது. தன்னை அர்ப்பணித்தல் என்பது அதுதான். சுயமுள்ள  எழுத்தாளனின் உயிர்ப்பான தருணங்களை அவன் எப்போதும் கைவிடாதிருத்தல் வேண்டும். சமூகத்தை விழிப்புணர்வூட்டக்கூடிய கருத்துக்கள் இன்ஷாபின் கட்டுரைகளில் மென்மையான அணுகுதலோடு முன்வைக்கப்படுகின்றன.

// பரிசு எனும்போது தேனீர்க் கோப்பை, பீங்கான், கரண்டி என்பவற்றுக்கு அப்பால் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. // என்றும்..

// அடுத்தவனின் முதுகில் குத்துவதற்கே காத்திருக்கும் உலகில் அடுத்தவன் முதுகை தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு வார்த்தைக்கு ஈடாக ஒரு பரிசை நாம் கண்டுகொள்ள முடியாது. கவலைகளால் நிரம்பி காலங்கடத்தும் ஒருவருக்கு மகிழ்ச்சியைப் பரிசளிக்க ஏன் எங்களால் முடிவதில்லை. // எனவும் – இரண்டிலும் நிம்மதி இல்லை, என்றொரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர் தனது எழுத்துக்களால் சிந்தனைகளால் ஆழச்செல்ல வேண்டும். ஒரு மரத்தின் வெளித்தோற்றத்தை விமர்சிப்பதைவிடவும் தேவையானது அம்மரத்தின் ஆணிவேர்வரை பீடிக்கப்பட்டுள்ள அதன் நோய்க்கூறுகளை பற்றியும் கவனம் எடுப்பதாகும்.

இயற்கையை கொண்டாடுதல் எனும் நிலையி்ல் சில துளிகளை இந்நூலில் காணலாம்.

// பூமியின் சமநிலை குலையாமல் ஆப்புகளாக அவை எப்படி ஆக்கப்பட்டுள்ளன. எப்போது அவை இத்தனை பெரிதாய் வளர்ந்தன ஏன் இத்தனை மௌனத்துடன் இருக்கின்றன. தம் பள்ளத்தாக்குகளில் காவுகொண்ட உடல்களுக்கு என்னவானது. அதிசயப் பனிக்காற்று எங்கிருந்து உற்பத்தியாகின்றன. மலைகளை குடைந்து எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், தேன் ஏன் மலைகளில் கூடு கட்டிக் கொள்கிறது? ஏன் அவை மேகத்தைப்போல நகர்வதில்லை. எல்லாக் கேள்விகளும் சிந்தனையின் அடர்ந்த காடுகளில் நம் கண்களை கட்டிவிட்டு விடுகின்றன. // (மழையில் நனையும் மலை)

ஜாமியா நளீமியாவில் இருந்து கல்வியை முடித்து வந்த பின்னர். தமிழ் இலக்கியம் சார்ந்தும் கலை சிற்றிதழ்கள் சார்ந்தும் செயற்படுவது என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் இன்ஷாபின் இந்த இலக்கிய ஆர்வம் நிச்சயம் அவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் திறனாகவே காணப்படுகிறது.

ஒருவரது மென்னுணர்வுகள் எவ்வளவு தூரம் மற்றமைகளின் மீது கனிவு கொள்ளவும் உணர்வுகளை மதித்து பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியோடு செயற்படத் தூண்டுகின்றன என்பதை இன்ஸாபின் பல கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

மழையில் நனையும் மலை, காற்றில் கையசைத்து, இன்னும் கொடுக்காத பரிசு, கொண்டாடாத வாழ்க்கை, பச்சை இலையின் கறுப்புநிறம்

அவருடைய மொழியாலும் அனுவத்தினாலும் இது போன்ற செறிவான கட்டுரைகள் தொகுப்பில் காணப்படுகின்றன.. பிறப்பு மரணம் எனும் இரு கரைகளிடையே இளமை முதுமை ஆகிய பருவங்களின் மாயநதி அசைகின்றது. வசந்தங்களும் ரம்மியங்களும் அனலும் கோடையும் அந்தப் பயணத்தில் நிகழ்கின்றன.

இன்ஷாப் ஒரு கணம் வியப்பிலாழ்ந்தபடியும்  கேள்வி எழுப்பிய படியும் ஆதுரத்துடனும் தன் கலைமனதை சிதறவிட்டிருக்கின்றார். மெய்யாகவே அருடைய சமூக அக்கறை தான் இந்த எழுத்துக்கள். ஒரு எழுத்தாளனின் ஆற்றல்மிக்க முன்னெடுப்பு மற்றும் சமூகப்பணியும் இவ்விதமானதே. ஆன்மாவின் கண்களால் உற்றுநோக்கும்விதம் இன்னும் பல உண்மைகள் பேசப்பட வேண்டியுள்ளன. இன்ஷாப் தன்னை புதுப்பித்துக் கொண்டு வருபவர். ஓடுகின்ற நதிபோன்றவர். அவரது தார்மீகம் அவரது  எழுத்துக்களில் சந்தேகமின்றிப் புலப்படுகின்றது.