தமது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலைப் படைப்புக்களை உருவாக்குவதில் முஸ்லிம் சமூகம் ஆர்வம் கொள்ள வேண்டும் என இலங்கையின் தலை சிறந்த பாடலாசிரியரும் ஊடகவியலாளருமான நிலார் என்.காஸிம் தெரிவித்தார்.

அண்மையில் இன்ஸாப் ஸலாஹுதீன் எழுதிய “இலையில் தங்கிய துளிகள்“ நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றும் போது, எந்தவொரு சமூகத்தினதும் அடிப்படை உறுதியாக இருக்க வேண்டும் எனில் அச் சமூகத்தின் கலாசாரம் பலமாக இருக்க வெண்டும். கலாசாரம் பலமடைய வேண்டுமெனில் அவர்களது மொழி பலமடைய வேண்டும்.

அமரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், என பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அங்கு பயன்படுத்தும் பெரும்பான்மையினரின் மொழியையே பேசுகிறார்கள்.

தொடர்பாடலில் போதாத் தன்மை அல்லது தெளிவின்மை இருக்கும் போது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான உறவு சரியாகக் கட்டியெழுப்பப்படுவதில்லை சிங்கள மொழி மீது எங்களது நாட்டம் இன்னும் அதிகமாக வேண்டும்.பள்ளிவாயலில் சிங்களம் பேசுவது கூடாது என்ற ஒரு காலம் இருந்தது.இன்று குத்பாக்கள் சிங்கள மொழியில் நிகழ்த்தப்படுகின்றன. நாங்கள் சிங்கள மொழியை நல்ல முறையில் பயன்படுத்த பழகியிருக்கிறோம்.

எங்களது சமூகம் சமயத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்துடன் ஒப்பிடும் போது கலை கலாசாரத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் போதுமானதாக இல்லை.அழகியல் சார்ந்த பாடங்களை முஸ்லிம்கள் படிப்பதில்லை.கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அழகியல் சார்ந்த ஏதாவது ஒரு பாடத்தை முஸ்லிம் மாணவர்கள் கற்க வேண்டும் என்று சொன்ன போது அவர் விமர்சிக்கப்பட்டார்.

இஸ்லாம் பரவியுள்ள நாடுகளில் இஸ்லாமிய கலை கலாசாரம் எந்தளவு பரவியுள்ளது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். ஈரான்,சிரியா,லெபனான் எகிப்து போன்ற நாடுகளில் சினிமாத் துறை நல்ல வளர்ச்சியடைந்துள்ளது.முஸ்லிம் கலாசாரத்தை மையப்படுத்திய பல்வேறு கலை,இலக்கிய வடிவங்களை அங்கு நாம் காணலாம்.

ஆனால் இலங்கைச் சூழலில் அத்தகைய செயற்பாடுகளை நாம் அரிதாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.எமக்கான கலை இலக்கிய வடிவங்களை நாம்தான் வளர்த்தெடுக்க வேண்டும்.மார்க்கத்தின் எல்லைக்குள் இருந்து கொண்டு செய்ய முடியுமானவற்றையாவது நாம் செய்வதில்லை.இது குறித்து முஸ்லிம் சமூகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் கலாசாரத்தை அடிப்படையாக்க் கொண்ட கலைப் படைப்புக்களை உருவாக்குவதில் நாம் நாட்டம் கொள்வதில்லை.இது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

எமது குழந்தைகள் அழகியல் சார்ந்த விடயங்களில் ஆர்வம் இல்லாது பாடப் புத்தகங்களில் மாத்திரம் கவனம் செலுத்தும் போது ரசனையற்றவர்களாக மாறுகிறார்கள்.இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் வன்முறைகளால் எதிர் கொள்ள முற்படுகிறார்கள்.

எமது அடுத்த தலைமுறையாவது புத்தாக்க சிந்தனைகளை உள்வாங்கி கலை இலக்கிய முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வளர வேண்டும்.இல்லாத போது கலாசார அடையாளங்கள் எதுவுமற்ற ஒரு சமூகமாக நாம் இருக்க வேண்டிய நிலை வரும்.

தமிழ் மொழியில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு சிங்களத்தில் உரையாற்றக் கூடிய நானும் ஒரு சிங்கள திரைப்பட இயக்குனரும் அழைக்கப்பட்டிருப்பது குறித்து இன்ஸாபுடன் நான் உரையாடினேன்.இதுதான் நாம் இனிமேல் நடைமுறைப்படுத்த வேண்டிய முறைமை என அவர் தெரிவித்தார்.இது ஒரு சிறந்த அணுகுமுறை.இதனை நான் வரவேற்கிறேன்.

நாம் இனிமேலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக வாழ முடியாது.ஏனைய சமூகங்களுடன் இணக்கமாகப் பழக வேண்டும். எம்மிடமுள்ள விடயங்களை அவர்களுடன் பகிர வேண்டும். அவர்களிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.அது மொழியினூடாக கலாசாரத்தினூடாக பரஸ்பர நம்பிக்கையினூடாக படிப்படியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.