பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்கள் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மொழியியலில் தனது கலாநிதிப் பட்டத்தை இந்தியா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். அப்போது அவர் மொழிபெயர்த்து வெளியிட்ட பலஸ்தீனக் கவிதைகள் என்ற நூல் மிகுந்த பிரபல்யம் பெற்றது. சமீபத்தில் அதன் திருத்திய, விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது. ஆய்வுகள், கட்டுரைகள், சிறுகதைகள் என இவரது எழுத்துத் தளம் விரிந்தது. இதுவரையில் 33 நூல்கள் வெளி வந்துள்ளன.

பேராசிரியர் அவர்கள் 1991ம் ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இவர் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.

சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹுதீன்

* இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி எது என்பதில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. நீங்கள் ஒரு மொழியியல் ஆய்வாளர் என்ற வகையில் இது பற்றி விளக்க முடியுமா?

நான் இதைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன். எழுதியும் இருக்கிறேன். உலகத்தில் தமது தாய்மொழி பற்றிய சந்தேகம் நிலவுகின்ற ஒரு சில சமூகங்கள்தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அவற்றில் இலங்கை முஸ்லிம்களும் அடங்குகின்றனர். பொதுவாக சமூகங்களுக்கு மத்தியில் தமது தாய்மொழி பற்றிய சந்தேகங்கள் வருவதில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் 1000 வருடங்களுக்கு மேலாக இருக்கின்றார்கள். அவர் களது தாய்மொழி பற்றிய பிரச்சினை சுமார் ஒன்றரை நூற் றாண்டுகளாகத்தான் இருக்கின்றது என்று நினைக்கின்றேன். அரசியல் வளர்ச்சி, தமிழ்-முஸ்லிம் முரண்பாடு என்பன இதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மேலும், முஸ்லிம்களின் குடிசனப் பரம்பலும் இதில் செல் வாக்குச் செலுத்தியுள்ளது.

வடகிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தாய்மொழி பற்றிய பிரச்சினையில்லை. ஏனெனில், அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் தமிழை மட்டும் அறிந்தவர்கள். ஆனால், ஏனைய பகுதிகளில் வாழ்பவர்கள் இரு மொழி (தமிழ், சிங்களம்) பேசக் கூடியவர்கள்.

அரசியல் காரணங்களுக்காகத் தான் முஸ்லிம்களின் தாய்மொழி எது என்ற பிரச்சினையைச் சில புத்திஜீவிகள் தொடங்கினார்கள். ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்களுடைய காலத்திலிருந்து முஸ்லிம் களின் தாய்மொழி தமிழ்தான் என்ற கருத்து தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இன்று முஸ்லிம்களின் வீட்டு மொழியை எடுத்துக் கொண்டால் அது தமிழாகத்தான் இருக்கின்றது. தமது சொந்தக் குழுவினர்களுடன், உறவினர்களுடன், நண் பர்களுடன் பேசுகின்ற மொழி எதுவோ அதுதான் அவர்களது முதல் மொழி அல்லது தாய் மொழி எனப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் தம்முள் உரையாடு வதற்கு தமிழையே பயன்படுத்துகின்றனர்.

கடந்த சுமார் 25 ஆண்டுகளில்தான் இதில் ஒரு மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. சிங்கள, ஆங்கில மொழிமூலம் படிக்கின்ற இளைஞர்கள் தங்களுக் குள் அந்த மொழிகளிலேயே பேசிக்கொள்கிறார்கள். ஆனால், வீட்டில் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள் என்று நான் நினைக்கின்றேன். அந்த வகையில் பார்க்கும்போது முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்தான். அதில் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. ஆனால், முஸ்லிம்கள் அறபுமொழியை அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ள வேண்டும் என்று பேசப் பட்டதுண்டு. ஆனால், நாம் தாய் மொழியை நினைத்தவாறு மாற்றிக்கொள்ள முடியாது. புலம் பெயர்ந்தவர்களைப் பொறுத்தவரை அவ்வாறிருக்கலாம். புலம் பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறை தங்களுடைய சொந்த மொழியை இழந்தவர்களாகத்தான் வளர்கின்றார்கள்.

இன்று தாய்மொழி என்பதை மொழியியலாளர்கள் வலியுறுத்துவதில்லை. மாற்றமாக முதல் மொழி என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். தாயினுடைய மொழிதான் தாய் மொழி என்ற கண்ணோட்டம் இன்று போய்விட்டது. அந்தச் சூழ்நிலை தற்போது இல்லை. முதல்மொழி என்பதுதான் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் தான் பிறந்து வளரும் சூழலில் இருந்து இயல்பாகவே பெற்றுக் கொள்ளும் மொழிதான் முதல்மொழி.

* முஸ்லிம்களின் கல்வி மொழியில் ஒரு வேகமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது பற்றிக் குறிப்பிடுங்கள்.

உண்மையில் இதுவொரு பிரச்சினைக்குரிய விடயம்தான். 1960 அல்லது 70க்குப் பிறகுதான் பெருமளவில் சிங்கள மொழிக்கான மாற்றம் இடம்பெற்றது. குறிப்பாக தென் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் தான் இந்த மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. அவர்கள் வாழ் கின்ற சூழல், அவர்களுக்கு வா#ப் பான பாடசாலைகள் இன்மை, தொழில் வா#ப்பு என்பன இந்த மாற்றத்திற்குரிய அடிப்படைக் காரணங்களாகும்.

இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தங்களது பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்கவே விரும்புகின்றனர். இது உண்மை யில் உலக மயமாக்கத்தின் பாதிப்புதான். கல்வி உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது இந்த மாற்றம் அவ்வளவு பொருத்த மானதல்ல. ஏனெனில், குறிப்பாக ஆரம்பக் கல்வி தா#மொழியில் அல்லது முதல் மொழியில் இருக்க வேண்டும் என்பது பொதுவாக கல்வியியலாளர்களாலும் கல்வி உளவியலாளர்களாலும் அங்கீ கரிக்கப்பட்ட உண்மையாகும்.

ஆனால், சமூக அரசியல் மனப்பாங்கு காரணமாக எல்லோரும் தங்களது பிள்ளைகளை ஆங்கில மூலக் கல்விக்கு அனுப்புகின்றார்கள். ஆனால், தகுதியான ஆசிரியர்களோ அதற்கான சூழலோ அங்கில்லை. பாடசாலையை விட்டு வெளியில் வந்தால் அவர்கள் தமிழ் மொழிச் சூழலில்தான் வளர்கின்றார்கள்.  அந்தப் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி சிக்கல் நிறைந்ததுதான்.

இன்று பெற்றோகள் சர்வதேசப் பாடசாலை என்று அலைகின்ற சூழலைக் காண முடிகிறது. அதிகமான பணத்தை அவர்கள் செலவிடுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேசினால் போதும் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பு. ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம்தான் இதில் மும்முரமாக ஈடுபடுகின்றது.

இன்றைய உலகில் ஆங்கிலம் முக்கியமானதுதான். ஆனால், அதனை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்வதுதான் பொருத்தமானது. வெறுமனே ஆங்கிலத்தை பேசத் தெரிவதால் மட்டும் அறிவை உள்வாங்கவோ அதில் ஆழமாகச் செல்லவோ முடியாது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

* எல்லா மொழிகளிலும் நவீனப்படுத்தல் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழ் மொழியின் நவீன போக்குகள் பற்றி…

நவீன தேவைகளுக்கு ஏற்ப மொழியை இணக்கப்படுத்திக் கொள்வதனைத்தான் நாம் நவீனப்படுத்தல் என்கிறோம். 19ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழ் மொழி நவீன தேவைகளுக் கேற்ப தன்னை இணக்கப்படுத் திக் கொண்டு வருகிறது. துமிழ் ஒரு செம்மொழியாக இருக்கும் அதேவேளை அது ஒரு நவீன மொழியாகவும் இருக்கின்றது. எனினும், ஆங்கிலம் போன்ற நவீன மொழிகளுடன் ஒப்பிடும் போது அதனை வளர்ச்சியடைந்த மொழி என்று சொல்ல முடியாது. அது இன்னும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கின்றது.

தமிழில் பழமைவாதச் சிந்தனை இன்னும் இறுக்கமாக இருக்கின்றது. பழைய தமிழ்தான் நல்லது, தூய்மையானது இன்றைய தமிழ் சிதைவடைந்தது. எனவே, தூய தமிழை, தனித் தமிழைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துக்கள் அதிகார மட்டத்தில் உள்ளவர் களிடம் இருக்கின்றது. ஆனால், பொதுத் தளத்தில் சரளமான தமிழ் பாவனையில் உள்ளது. இத்தகைய ஒரு முரண்பாட்டை நாம் தமிழ் வளர்ச்சியில் அவ தானிக்கலாம்.

கல்வித் துறையில் வலியுறுத் தப்படும் தமிழ் பண்டிதத் தனமான தமிழாகும். புதிய மாற்றங்கள் அங்கு அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால், அதற்கு வெளி யில் உள்ள தமிழ் வித்தியாசமானது. அதுதான் இன்றைய தமிழ். இன்று நாம் மாணவர் களை இந்தத் தமிழுக்குத்தான் பயிற்ற வேண்டியிருக்கிறது. இன் றைய தமிழ்தான் அவர்களுக்குத் தேவை. தமிழ் தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல. தமிழ்மொழி முஸ்லிம்களின் பிரதான மொழி என்ற வகையில் முஸ்லிம்களுக் கும் உரியதுதான். முஸ்லிம்களும் தமிழ் வளர்ச்சி பற்றி அக்கறை கொள்ள வேண்டும்.

* சமூக முன்னேற்றத்தில் அறிவு ஜீவிகளின் பங்களிப்பு குறித்து…

அறிவு ஜீவிகள் என்று நாம் யாரைச் சொல்கின்றோம் என்பது முக்கியமானது. ஏனெனில், பல வகையான அறிவுஜீவிகள் இந்த சமூகத்தில் இருக்கின்றார்கள். உலமாக்களும் அறிவு ஜீவிகள்தான். அவர்கள்தான் இதில் பிரதான பங்கு வகிக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. நவீன சிந்தனை இல்லை. மதவிவகாரங்களில் ஒவ்வொருவரும் தாங்கள் சரி, மற்றவர்கள் பிழை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். இந்த நிலை அவர்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, ஏனைய மட்டங்களில் இருக்கும் புலமைவாதிகளிடமும் காணப்படுகின்றது. ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில்தான் கூடுதலான வேறு பாடுகள் இருக்கின்றன.

நமது அறிவு ஜீவிகளில் பெரும்பாலோர் பழமைவாதிகளாக இருக்கிறார்கள். கொள்கையளவில் நவீனத்துவத்துக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். இது எமது சமூகத்தைப் பொறுத்தவரை மிகச் சிக்கலான விடயம். நாம் ஒருவகையான இரண்டக நிலையில் இருக்கின்றோம். ஒரு புறம் மேலைத் தேசத்தின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன்களை முழுக்க முழுக்க அனுபவிக்கின்றோம்.

மறுபுறம் நவீனத்துவச் சிந்தனைக்கு எதிரானவர்களாக நிற்கி @றாம். நவீனத்துவம் என்பது மேலை மயமாக்கலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் உண்மையைக் கூர்ந்து பார்த்தால் வாழ்க்கை வசதிகளைப் பொறுத்தவரை நாம் முற்றிலும் மேலைமயமாக்கத்துக்கு ஆளாகியிருக்கிறோம். மேலும் மேலும் அதைநோக்கிச் சொல்கிறோம். ஆனால், சிந்தனையைப் பொறுத்த வரை ஒரு இருட்டுக்குள் இருக்கிறோம். நமக்கென்ற ஒரு பண்பாட்டு நவீனத்துவம் பற்றிய சிந்தனை நமக்கில்லை. பழமையை நோக்கிச் சொல்வதே நமது பண்பாட்டுப் புத்துயிர்ப்பு என்று நம் மில் பலர் நினைக்கிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற மாபெரும் இஸ்லாமியக் கண்காட்சி கூட என்னைப் பொறுத்த வரை ஒரு பழைய விடயம்தான்.  ஆரம்பகால முஸ்லிம்கள் அறிவியலுக்குப் பெரும் பங்காற்றினார்கள் என்பது உலகம் அறிந்த விடயம். இடைக்காலத்திலிருந்து முஸ்லிம் உலகில் அறிவியல் ஏன் வளர்ச்சியடையவில்லை என்பன குறித்து எமது புலமைத்துவவாதிகள் சிந்திக்க வேண்டும். நாம் நவீன உலகுக்கு ஒரு குண்டூசியைக் கூட புதிதாக உற்பத்தி செய்து கொடுக்கவில்லை. நாம் மேலைய உற்பத்திப் பொருட்களின் நுகர்வாளர்களாகவே இருக்கிறோம்.

“எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” என்பது போல் நமது முன்னோரை நினைத்து பெருமைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும், எமது சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் அகக் கார ணிகளை நாம் இனங்கண்டு அவ சரமாக அவற்றை நிவர்த்திக்க வேண்டும். அப்போதுதான் சமூக முன்னேற்றம் சாத்தியமாகும்.

இன்றைய உலக சனத் தொகையில் முஸ்லிம்கள் மத்தியில்தான் எழுத்தறிவற்றவர்கள் அதிகம். உலக முஸ்லிம்களில் சுமார் அரைவாசிப் பேர் எழுத்தறிவற்றவர்கள். நவீன உலகில் எழுத்தறிவற்ற ஒரு சமூகம் எதைத்தான் சாதிக்கமுடியும்? உலகுக்கு அறிவொளி பரப்பியதாக மார்தட்டும் ஒரு சமூகம் ஏன் இந்த நிலையில் இருக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். நவீன கல்வி முறைக்குள்ளால் வந்தவர்களும் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். ஆனால் அவர் களுக்குள்ளும் ஒரு சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும்.