ஒரு நீதிபதியினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண் நீதியைத் தேடி பல இடங்களுக்கு அலைகிறார்.நீதித்துறை சார்ந்த நிறுவனங்களில் வாக்குமூலம் வழங்குகிறார்.ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுகிறார்.எல்லா முயற்சிகளும் தோல்வியடைவே ராவய பத்திரிகை அலுவலகத்தை நாடுகிறார் கமலாவதி.

அவருக்கு நடந்த அநீதியைக் கேட்டறியும் விக்டர் ஐவன் இது குறித்து எழுத முன்வருகிறார்.“ஒரு புரட்சி செய்யும் நோக்கில் இந்த விடயத்தில் நான் கால் வைக்கவில்லை.ஒரு அப்பாவிப் பெண் தனக்கு நடந்த அநீதியைச் சொல்லக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நடந்த பிழையை சரி செய்ய நான் நினைத்தேன். அப்போதுதான் நாங்கள் எவ்வளவு பயங்கரமான ஒரு இடத்தில் இருக்கிறோம் என்பது எனக்குப் புரிந்த்து“ என்று கூறும் விக்டர் 1997.08.16 அன்று இதனை தலைப்புச் செய்தியாக்கினார்.

அதைத் தொடர்ந்து இது ஒரு போராட்டமாகவே உருக் கொள்கிறது. நீதியைப் பெற்றுக் கொடுக்க மிகுந்த பிரயத்தனம் எடுக்கிறார் விக்டர்.இதே நீதிபதியால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்னைப் பற்றி தனது வாசகர் ஒருவர் மூலம் அறிந்து கொள்கிறார் விக்டர்.

நீதிக்கான தொடர் போராட்டமாக தனது எழுத்துக்களால் சுமார் இரண்டு வருடம் போராடுகிறார் விக்டர் ஐவன்.இறுதியில் முறையான நீதி அப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை.

நீதிபதி லெனின் ரத்னாயக்க சம்பந்தப்பட்ட, விடயங்களை வெளியே கொண்டுவரவில்லை என்று ராவய ஆசிரியரால் குற்றம் சுமத்தப்பட்ட நீதிபதி சரத் நந்தன சில்வா அவர்கள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்னிலையில் 1999.09.16 அன்று நாட்டின் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்கிறார்.

1999.09.19 அன்று வெளியான ராவய பத்திரிகை  அப் புகைப்படத்தை தலைகீழாகவும் பத்திரிகையின் முகப்புப் பக்கத்தை கருப்பு நிறத்திலும் வெளியானது.எதிர்ப்பின் வெளிப்பாடாகவே இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் பிரசன்ன விதானகேயினால் இயக்கப்பட்ட ஆவணப்படமே உஸாவிய நிஹடய்.

பிரசன்ன குழுவினர்  பாதிக்கப்ட்ட பெண்னைத் தேடிச் செல்கின்றனர்.இப் படத்தில் அவர் தோன்ற மறுக்கவே விக்டர் ஐவன் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இப் படத்தை தயாரித்திருக்கிறார்.

கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது.நீண்ட போராட்டத்தின் பின்னர் தடை உத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்நது திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது.

ஒரு ஊடகவியலாளரின் துணிச்சலான போராட்டத்தை இப்படம் பதிவு செய்கிற அதே நேரம் நீதித்துறையின் பலவீனங்களை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

இத் திரைப்படம் குறித்து கருத்துச் சொல்வதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டாலும் எந்தவிதப் பதிலும் கிடைக்கவில்லை என படத்தின் இறுதியில் குறிப்பிடப்படுகிறது.

ஒரு நீதிபதிக்கு எதிராக விக்டர் ஐவனும் அவரது ராவய பத்திரிகையும் எத்தகைய ஒரு துணிச்சலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளது என்பது இப் படத்தை பார்க்கும் போது தெளிவாகிறது.அதேநேரம் பாதிக்கப்பட இரண்டு பெண்களின் கணவர்களும் நீதிபதியைக் தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் முற்பட்டிருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.பாதிக்கப்பட்ட,நீதி மறுக்கப்பட்ட அவர்களது மனநிலையின் வெளிப்பாடு இது.

நீதியை நிலை நாட்ட வேண்டியவர்களே நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் இயலாமையை எப்படிப் புரிந்து கொள்வது.? நீதித்துறையின் மறைக்கப்பட்ட பகுதியை படத்தில் பார்க்கும் போது நீதி மறுக்கப்பட்ட அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டவர்களது நினைவுகள் மனதைத் தட்டுகின்றன.

எத்தனையோ குற்றவாளிகள் நிரபராதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மறுக்கப்பட்டவர்களின் நீதியைத் தேடிய ஒரு பயணமாக உஸாவிய நிஹடய் அமைந்திருக்கின்றது.

இதனைத் துணிச்சலுடன் இயக்கிய பிரசன்ன விதானகேயும் அவரது குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தமது பொறுப்புணர்வு மிக்க பணியில் எப்படி ஈடுபட வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று.