போர்க் காலத்தையும் போருக்குப் பிந்திய காலத்தையும் மையமாகக் கொண்டு இலங்கையில் சினிமா முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.இதில் பிரசன்ன விதானகே,அசோக ஹந்தகம,விமுக்தி ஜயசுந்தர ஆகிய மூன்று இயக்குநர்களும் தமது திரைப்படங்களை இயக்கியிருக்கின்றனர்.இதன் காரணமாக சர்வதேசத்தின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தயாரிப்பில் இந்த 3 இயக்குனர்களும் ஒன்றிணைந்து மூவர் எனும் படத்தை இயக்கியிருக்கின்றனர்.ஊடகவியலாளர்களுக்கான முதல் திரையிடல் கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபணத்தில் இடம்பெற்றது.

அவள்

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றிய கேஷா கொல்லப்பட்ட இராணுவவீர்ர்களின் உடமைகளைப் பரிசோதிக்கும் போது சம்பத் என்பவரின் காதலியின் புகைப்படத்தைக் காண்கிறார். புகைப்படத்தின் பின் பக்கத்தில் அவருடைய தொலைபேசி எண் இருக்கிறது.அதைப் பார்த்துவிட்டு அவருக்குப் பேசத் தோன்றுகிறது. அழைப்பை ஏற்படுத்திக் கதைக்கிறார்.உன் காதலன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.ஆனால் அவருடன் பேச முடியாது எனச் சொல்கிறார்.மேலிடத்திலிருந்து அந்தப் பெண் பற்றிய தகவல்களை விசாரிக்கவே கேஷாவுக்கு அந்தப் பெண்ணின் வாழ்க்கை குறித்து அச்சம் ஏற்படுகிறது.உடனே அழைப்பை ஏற்படுத்தி இனிமேல் கதைக்க முடியாது எனவும் இங்கிருந்து யாரும் அழைப்பை ஏற்படுத்தினால் கதைக்க வேண்டாம் எனவும் கூறுகிறார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கேஷா சரணடைகிறார்.இப்போது தொழில் எதுவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சிரமப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது.ஒரு பெண் நடிகை தேவைப்படும் சந்தர்ப்பத்தில் கேஷா அங்கு பிரசன்னமாகிறார்.அதைத் தொடர்ந்து இயக்குனரோடு அந்தப் பெண்னைத் தேடிப் போய்ப் பார்ப்பதாக கதை விரிகிறது.

அவன்

பௌத்த மத்த்தில் தீவிர நம்பிக்கை கொண்ட சிங்களப் பாட ஆசிரியர் தனது வகுப்பு மாணவனின் சகோதரன் ஒரு தமிழ்ப் போராளியாக மறுபிறவி எடுத்துள்ளதை நம்ப மறுக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது இரண்டாவது கதை ஒரு சிங்களக் குடும்பத்தில்.சிங்கள மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் இதை நம்ப மறுக்கிறார்.இதை மறைக்க முயற்சி செய்கிறார்.இச் செய்தி பத்திரிகையில் வரவே அக் குழந்தையையும் தாயையும் தனது ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.இதைச் சுற்றிய கதையாக இப் படம் அமைந்திருக்கிறது.

மற்றையவர்

காணாமல் போனவர்கள் குறித்த ஒரு ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் கணவனை இழந்த பெண்ணும் தனது மகனை இழந்த தாயும் சந்தித்துக் கொள்கின்றனர்.தேநீர் அருந்த ஒரு கடைக்குச் சென்றதும்.அந்தத் தாய் ஒரு இளைஞனைக் கண்டு அது எனது மகன் எனச் சொல்லிக் கொண்டு பின்னால் ஓடுகிறார்.ஆட்டோ சாரதியான ஒரு சிங்கள இளைஞனுடன் சேர்ந்து மகனைத் தேடுவதாகக் கதை விரிகிறது.

இந்த மூன்று கதைகளும் ஒரே தளத்தில் மூன்று கதைகளாக தனித்தனியே பயணிக்கின்றன.மூன்று கதைகளையும் இணைக்கின்ற ஒரு மெல்லிய கோடு படத்தில் இழையோடுகின்றது.

போருக்குப் பிந்திய நிலமையைப் பேசுகின்ற படங்கள் யுத்தத்த்திற்கான காரணங்களைப் பேச முனைந்திருக்கின்றன.இருந்தாலும் இந்த இயக்குநர்கள் யுத்த்த்திற்கான காரணங்களை தமது படங்களில் ஆழமாகக் கதைப்பதில்லை என்ற ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுவதை இங்கு மனங்கொள்ளலாம்.

மூன்று தசாப்தங்களாக்க் தொடர்ந்த உள் நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் உண்மையான சமாதானம் இன்னும் மலரவில்லை என்பதை நாம் எற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இலங்கை போன்ற ஒரு பல் கலாசார,பல இனங்கள் வாழுகின்ற நாட்டில் உண்மையான சமாதானத்துக்கான போராட்டம் என்பது யுத்தத்தை விடக் கடினமானதே.

முதலாவது கதை விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒளிப்பதிவாளராக இருந்தவ ஒருவர்  இராணுவ வீரனின் மனைவியின் மீது பரிவு கொண்டு அவரைக் காப்பாற்றுகிறார்.ஆனால் அவரது காதலன் உயிரோடு இருப்பதாக பொய் சொல்கிறார்.அந்தப் பொய் அவரது மனசாட்சியை உறுத்துகிறது.தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள அவரைத் தேடிப் பயணப்படுகிறார்.தான் எதிரியாகப் பார்த்த ஒருவருக்கு அவர் உதவி செய்ய முனைந்ததை இக்கதை பதிவு செய்கிறது.

கேஷா ஒரு ஒளிப்பதிவாளராக இருந்தார்.இன்று தனது கனவுகளை தன்னால் பதிவு செய்ய முடியவில்லை என்று புலம்புவார்.அப் பெண்ணின் கதையை ஒரு படமாக்குவதற்கு கதையைத் தருவதாக கேஷா சொல்வார்.அப்போது இயக்குநர்,அது உங்கள் கதை அதை நான் எடுக்கக் கூடாது நீங்கள்தான் எடுக்க வேண்டும் என்பார்.

இக் கதையில் கேஷவராஜனும் அசோக ஹந்தகமவும் நடித்துள்ளனர்.கேஷவராஜனின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது.

பிரசன்ன விதானகே இக் கதையை எழுதி இயக்கி இருக்கிறார்.வழமை போல எம்.டி மஹிந்தபால,சிறிகர் பிரஸாத்,தபஸ் நாயக் போன்றவர்களும் இன்னும் பலரும் தயாரிப்பில் பங்கெடுத்துள்ளனர்.

அவன் கதை மறபிறவியுடன் சம்பந்தப்பட்டது.இக்கதை நீளமான காட்சிகளைக் கொண்டிருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்தியது.மறுபிறப்பை கேள்விக்குள்ளாக்குகிறது இக் கதை.அச் சிறுவன் தனது வீட்டைக் காட்ட வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது ஒரு உரையாடல் வரும்.இப்பகுதியில் உள்ள காணிகளை எல்லாம் முஸ்லிம்கள் வாங்கியிருக்கிறார்கள். பள்ளிவாயில்களை நிர்மாணிக்கிறார்கள். அங்கு அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது போன்ற கடும்போக்குவாதிகளின் குற்றச்சாட்டுகளை ஒரு ஆசிரியர் மற்ற ஆசிரியரிடம் பேசிக் கொள்வார்.அப்போது திடீரென் சாரதி வாகனத்தை நிறுத்தி தொழுதுவிட்டு வருவதாக தொப்பியை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் செல்வார்.

வந்ததும் ஆசிரியர் குழப்பமடைந்தவராக நாங்கள் உங்களைப் பற்றிச் சொல்லவில்லை. அடிப்படைவாதிகளைப் பற்றிச் சொல்கிறோம் என்பார்.அதற்கு அந்த சாரதி சாதாரண முஸ்லிம்கள் அப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்று நான் நம்பவில்லை.எல்லாம் ஊடகங்கள் செய்யும் வேலை.ஊடகங்களின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது நானே நம்பும் அளவுக்கு அது இருக்கிறது என்பார்.

விமுக்தி இங்கு இலங்கையின் இன்னொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை கொஞ்சம் தொட்டிருக்கிறார்.

இப்படத்தை விமுக்தி ஜயசுந்தர எழுதி இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவில் ஈஷிற் நர்ரை ஒளித்தொகுப்பில் சமன் எல்விட்டிகல ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மூன்றாவது கதை மற்றையவர்.என்னைப் பொறுத்தவரையில் இக் கதை வலுவான காட்சிகளாலும் உரையாடல்களாலும் அமைந்திருந்தது. இப்படத்தை அசோக்க ஹந்தகம எழுதி இயக்கியிருக்கிறார்.

இரண்டு பெண்களையும் ஆட்டோ சாரதி பொலிஸுக்கு அழைத்துச் செல்வார்.அங்கு நடக்கும் உரையாடல் பொலிஸ் மனநிலையை கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது.தமிழ் மொழியில் ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்வதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

தன் பிள்ளையை இழந்து மனநிலை குழப்பமடைந்து அலையும் ஒரு அபலைத் தாய்க்கு மறுபடி மறு அதிகாரம் நிரம்பிய குரல்களால் சொல்லப்படும் பதில் “உங்கள் பிள்ளை ஒன்றில் யுத்தத்தில் இறந்துவிட்டான்.சரணடைந்திருப்பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருப்பான். அவனுக்கு வீட்டுக்கு வருவதில் விருப்பமல் இல்லாமல் இருக்கலாம்.“

இறுதியில் ஒரு சிங்களத் தாயின் வீட்டை அடைகிறார்கள். அவரது மகனையே அவர் கண்டிருக்கிறார்.அவன் ஆமியில் கடமையாற்றி போரினால் ஒரு காலை இழந்திருக்கிறான்.இருவரும் போரை வென்று வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவர்கள்.ஒருவர் திரும்பினார். இன்னுமொருவர் திரும்பவேயில்லை.

அந்தத் தாய் தனது பிள்ளை திரும்பி வருவான் என்று இன்னும் நம்புகிறார்.இப்படி எத்தனையோ தாய்மார் துன்பத்தில் தவிக்கின்றனர்.போராடியவன் வீரனா பயங்கரவாதியா என்பதற்கு அப்பால் எல்லாத் தாய்க்கும் தனது பிள்ளை எவ்வளவு முக்கியம் என்பதை இறுதி உரையாடலில் ஹந்தகம சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

போராட்டம் எதுவாக இருந்தாலும் ஒரு தாய் தன் பிள்ளையை இழப்பதென்பது எத்தனை கொடியது என்பதை இறுதிக் காட்சி அழகாக பதிவு செய்துள்ளது. இந்தக் கொடிய யுத்தத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? ஏன் இத்தனை உயிர்களை இழந்தோம்?எதற்காக இழந்தோம்? யாருக்காக இழந்தோம்? விதவைகளாகவும் அநாதைகளாகவும் மாற்றப்பட்டவர்களது வாழ்க்கை இன்று என்னவாக ஆகியிருக்கிறது? ஒரு அழகிய நாட்டுக்குள் வாழ்பவர்கள் ஏன் அழகிய வாழ்வை வாழக் கூடாது?எதற்காகப் பிரிவினைகள்?எதற்காக ஆயுதங்கள்?

ஆயுதங்கள் ஒருபோதும் எங்களை வாழ வைக்காது.மற்ற மனிதனைப் பற்றிய சரியான புரிதலே உன்மையான ஐக்கியத்திற்கும் சமாதானத்திற்கும் வழி சொல்லும்.இலங்கை அந்தத் திசையிலேயே இனிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. சகல சமூகங்களும் அடுத்த சமூகங்களின் பிரச்சினைகளை புரிந்து,ஏற்றுக் கொண்டு,விட்டுக் கொடுத்து பயணிக்கும் போதே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.அதற்கான பயணத்தை ஒவ்வொருவரும் தொடங்க வேண்டும் என்பதே இத் திரைப்படம் சொல்கின்ற செய்தி.