நான் பூமியில் இருந்து வருகிறேன்

பூமிக்கு வருகிறேன்

ஆபிரிக்காவின் இதயத்திலிருந்து

ஆசியாவின் சிறுநீரகங்களிலிருந்து

இந்தியாவிலிருந்து வாசனைத்

திரவியங்களுடன் வருகிறேன்

 

ஆழமான ஒரு அமேஸன் காட்டிலிருந்து

ஐவரி நிலத்திலிருந்து

திபேத்திய புல்வெளியிலிருந்து வருகிறேன்

இன்னும் அதி தொலைவிலிருந்து

என்னைச் சூழ உள்ள எல்லா இடங்களிலுமிருந்து

எங்கு மலைகள் மரங்கள் அருவிகள் கடல்கள்

இருக்கின்றனவோ அங்கிருந்து

இங்கிருந்து அங்கிருந்து எங்குமிருந்து

மத்தியதரைக் கடலின் கற்பத்திலிருந்து வருகிறேன்

 

ஒரு மனக் காயத்தின் வடுவிலிருந்து

மூடப்பட்ட எல்லைகளிலிருந்து

ஆயிரம் கூடாரங்களால் நிரம்பியிருக்கும் ஒரு முகாமிலிருந்து

அய்லான் குர்தி இறந்து கிடந்த கடற்கரையிலிருந்து வருகிறேன்

 

ஒரு துப்பாக்கி ரவையின் காயத்திலிருந்து

தனிமையிலிருக்கும் ஒரு குழந்தையின் முகத்திலிருந்து

ஒற்றைத் தாயின் பெருமூச்சிலிருந்து

மூழ்கவிருக்கும் காற்றூதிய படகின் ஒரு வெட்டிலிருந்து

 

ஐம்பது பேருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு தண்ணீர் போத்தலிலிருந்து

குறுநடை போடும் ஒரு குழந்தையின் மூக்கில் உறைந்திருக்கும் சளியிலிருந்து

ஒரு தந்தையின் கன்னத்தில் வழியும் ஒரு துளிக் கண்ணீரிலிருந்து

ஒரு பசித்த வயிற்றிலிருந்து

 

நான் ஒருமுறை இங்கிருந்திருக்கிறேன் எனும் சுவர்க் கிறுக்கலிலிருந்து

நான் வாழ்க்கையை நேசிக்கிறேன் எனும் இன்னொரு மரக் கிறுக்கலிலிருந்து

ஒரு காணாமற்போன அங்கத்திலிருந்து

ஒரு மனிதனைப் போல எல்லாவற்றுடனும்

எனக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்ள நான் வருகிறேன்

ஆமிர் தர்வீஷ்

தமிழில்இன்ஸாப் ஸலாஹுதீன்

புலம்பெயர்ந்த ஒருவரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அனுபவத்தைத் தருகிறது இக் கவிதை. இக் கவிதையை எழுதியவர் குர்தி இனத்தைச் சேர்ந்த சிரியக் கவிஞர் ஆமிர் தர்வீஷ்.இவர் குர்திஸ்தான் குறித்து எழுதிய கவிதையின் பின்னரே சிரிய அதிகாரிகள் அவரது எழுத்துக்கள் குறித்து அறிந்து கொண்டு அவரைத் தேட ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து, இப்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகிறார்.